சென்னை தங்க சாலையில் நடைபெற்று வரும் நாகாத்தம்மன் கோவில் திருவிழாவில் கலந்து கொண்ட பின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், "சென்னையில் லேசான மலைக்கு கூட அதே இடங்களில் தண்ணீர் தேங்கும் நிலைமை. மழைநீர் வடிகால் பணிகளால் சாலைகளில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறும் இடங்களில் ஒரு மாற்று பாதைக்கான பதாகை கூட வைக்காமல் காவல்துறை செயல்படுகிறது.
அதிமுக ஆட்சியில் பிரதான மலைக்கு கூட பெருமளவில் கால்வாய்களில் தண்ணீர் தேங்கவதில்லை. ஆனால் தற்பொழுது அதிகளவு தண்ணீர் தேங்குகிறது. மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்து விடுகிறது. அதிமுக காலத்தில் அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால் எவையும் சீராக பராமரிக்கப்படவில்லை. மேலும் அதிமுகவிற்கு நல்ல பெயர் வரக்கூடாது என்ற திமுகவின் ஈகோவால் அதிமுக கொண்டு வந்த திட்டங்களை திமுக செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டுள்ளது.
அதேபோல் ராயபுரம் தொகுதி எம்எல்ஏ பெயருக்கு எம்எல்ஏவாக இருக்கிறார். தொகுதியில் எந்த ஒரு பணியும் செய்யாமல் அரசிடம் சம்பளமே மட்டுமே வாங்குகிறார். ஆனால் தொகுதிக்கு வந்து எட்டிப் பார்க்கவில்லை தற்பொழுதும் ராயபுரம் தொகுதிக்கு எம்எல்ஏ யார் என குழந்தைகளிடம் கேட்டால் என்னை தான் கூறுவார்கள், திமுகவின் எம்எல்ஏவை இங்கு அதிகமானோருக்கு தெரியவில்லை.
முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் மக்களுக்கு பேருந்து, சத்துணவு உள்ளிட்ட அதிகமான திட்டங்களை கொண்டு வந்தார். அதேபோல் ஜெயலலிதா பெண்களுக்கு, கர்ப்பிணிகளுக்கு என அதிக நிதி ஒதுக்கீடு செய்து கொண்டு வந்த திட்டங்கள் மற்றும் விலை இல்லா மடிக்கணினி, மிதிவண்டி எல்லாம் விடியா அரசு மாற்றி வருகிறது. மேலும் திமுக கொண்டு வந்த விலையில்லா திட்டங்கள் அனைத்தும் ஊதாரி திட்டங்களாக தான் இருக்கிறது.