சென்னை: சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி மெட்ராஸ் கல்வி நிறுவனத்தில் “நிலைத்தன்மைக்கான பள்ளியின் தொடக்க விழா” நடைபெற்றது. நிகழ்ச்சியை தொடங்கி வைத்து நாடாளுமன்ற உறுப்பினரும், நிதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு தலைவருமான ஜெயந்த் சின்ஹா பேசியதாவது, “இன்று உலகம் தீயில் எரிவது போல மிகவும் சூடாக உள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு அதிகமான வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதிலும் குறிப்பாக, செப்டம்பர் மாதத்தில் அதிக அளவு வெப்பத்தை நாம் அனுபவித்துள்ளோம்.
மேலும், கனடாவில் ஏற்பட்ட தீயில் இருந்து, சிக்கிமில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் வரை அனைத்து இயற்கை விபத்துகளுக்கு திடீர் காலநிலை மாற்றம்தான் காரணம். தற்போது நாம் எதிர்பார்க்காத வகையில் காலநிலை மாற்றங்கள் நடைபெற்று வருகிறது. காலநிலை மாற்றம், முக்கிய வளங்களின் அழிவுக்கு வழிவகுக்கும் விதமாக மனித நடவடிக்கைகள் இருப்பதால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை இந்த உலகம் அனுபவித்து வருகிறது.
அதனைத் தொடர்ந்து, இனி வரும் பொறியாளர்கள், மற்றவற்களைப் போல் செயல்படாமல் இந்த பூமியை எப்படி காப்பாற்றுவது என சிந்திக்க வேண்டும். இது போன்ற மாற்றங்களை நம்மால் கணிக்க முடியாத நிலையில், அவற்றை எதிர்கொள்ளும் வகையில் எப்படி தடுப்பு முறைகளை உருவாக்க முடியும்? கடந்த 220 ஆண்டுகளில் பூமியின் சராசரி வெப்பநிலை 1.2-இல் இருந்து 1.3 டிகிரி செல்சியஸாக மாறி உள்ளது.