சென்னை:சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்த ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை சம்பந்தமாக ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
"சட்டமன்றத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை ஆணை அறிக்கையும், ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை அறிக்கையும் வெளி வந்து 6 நாட்கள் ஆகிறது. இந்த 2 சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய முதலமைச்சருக்கு நன்றி.
இரண்டு அறிக்கையும் வெளிவந்துள்ள நிலையில் எடப்பாடி பழனிச்சாமி வாயை திறந்து பேசமால் இருப்பது வேடிக்கையாக உள்ளது. தூத்துக்குடி சம்பவத்தை தொலைக்காட்சியில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என்று எடப்பாடி சொல்கிறார். எடப்பாடி உள்ளிட்ட தவறு செய்தவர்கள் மீது தனி நீதிபதியை அமைத்து குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சினிமா போஸ்டர் ஒட்டி கொண்டு இருந்தவர்களை அதிமுகவில் அமைச்சர்களாக ஆக்கியவர் ஜெயலலிதா. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை சரி இல்லாத நேரத்தில் அவர்களை வெளிநாடு அழைத்து சென்று மேல்சிகிச்சை தரவில்லை. இதற்கு முழு பொறுப்பு அந்த நேரத்தில் அமைச்சராக இருந்த அனைவரும் தான்.
அப்போது சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் வாயைத் திறக்கவே இல்லை. ஜெயலலிதா மரணம் அடைந்த போது அமைச்சராக இருந்தவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். ஜெயக்குமார் அமைச்சர் பதவி வேண்டாம் என்று சொல்லி ஜெயலலிதாவை வெளிநாட்டு சிகிச்சைக்கு அழைத்து செல்ல வேண்டும் என்று ஏன் அழுத்தம் கொடுக்கவில்லை.
கோவை செல்வராஜ் அளித்த பேட்டி முன்னாள் தலைமை செயலாளர் மற்றும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் மருத்துவர்களிடம் கலந்து பேசி வெளி நாட்டுக்கு அழைத்து சென்று இருக்கலாம். ஜெயலலிதாவை கொல்ல வேண்டும் என்பதற்காக தான் இனிப்பு வகைகள் கொடுக்கப்பட்டதா?. ஜெயலலிதாவிற்கு அதிக அளவில் இனிப்புகள் ஐஸ்கிரீம் தந்து அவர்களை சித்திரவதை செய்து அவரை கொடூரமாக கொன்று இருக்கிறார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் தயவு தாட்சண்யம் பார்க்கமால், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓபிஎஸ், வெளிநாடு அழைத்து செல்ல வேண்டும் என்று கூறினார். சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் ஒரு சில அமைச்சர்கள் வெளிநாடு செல்ல ஒத்துழைக்க வில்லை. அப்போது ஓபிஎஸ், சொல்லை அமைச்சர்கள் யாரும் கேட்க வில்லை. இதய தெய்வம் என்ற வார்த்தையை எடப்பாடி உள்ளிட்ட யாரும் இனி சொல்ல வேண்டாம்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நீதிபதி முறையான நீதி வழங்கியது போல் ஜெயலலிதாவின் கொலை வழக்கிற்கும், தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கிற்கும் நீதி தரவேண்டும். முறையான விசாரணை நடத்தி நீதி தரவில்லை என்றால் சாகும் வரை ஜெயலலிதாவின் சமாதியில் தொண்டர்களுடன் உண்ணாவிரதத்தில் ஈடுபட உள்ளேன்" என கூறினார்.
இதையும் படிங்க:தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக 3 ஐபிஎஸ் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க முடிவு