பெங்களூரு: தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, 1991 முதல் 1996ஆம் ஆண்டு வரை முதன்முதலாக முதலமைச்சர் பதவியை வகித்தார். அப்போது வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதன் அடிப்படையில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில், 66 கோடி ரூபாய் அளவுக்குச் சொத்து சேர்த்ததாகத் தெரிய வந்தது.
இதனையடுத்து சொத்துக்குவிப்பு தொடர்பாக ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகிய 4 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு கர்நாடக நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதனால் லஞ்ச ஒழிப்புத்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து பொருட்களும் கர்நாடக கருவூலத்தில் வைக்கப்பட்டன.
இதனிடையே கடந்த 2014ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி, சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகிய 4 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி பெங்களூரு தனி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து 4 பேரும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இதனையடுத்து பெங்களூரு தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை, கர்நாடக உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. பின்னர், கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கின் தீர்ப்பு 2017ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இதில், கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், இதற்கு முன்னதாகவே ஜெயலலிதா மரணமடைந்தார். இதனால் குற்றம் சாட்டப்பட்டவர்களின் பட்டியலில் ஜெயலலிதாவின் பெயர் நீக்கப்பட்டது. எனவே சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகிய 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் 4 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டு, தற்போது விடுதலை ஆகியுள்ளனர்.