சென்னை வண்ணாரப்பேட்டையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சந்தித்தார். அப்போது அண்ணா பல்கலைக்கழகத்திலிருந்து வருங்காலத்தில் அண்ணாவின் பெயரும் நீக்கப்படும் என்று ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு பதில் கூறிய அமைச்சர், "குறுகிய எண்ணம் படைத்தவர்களுக்குத்தான் இது போன்ற குறுகிய சிந்தனைகள் ஏற்படும். ஸ்டாலினின் கவலை எல்லாம் உதயநிதி ஸ்டாலினை எப்படியாவது முன்னிலைப்படுத்திவிட வேண்டும் என்பதுதான், நாங்கள் எப்போதும் அண்ணாவின் நினைவாகத்தான் இருப்போம், இது மக்களை திசை திருப்பும் முயற்சியாக உள்ளது" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவில் குடியுரிமை பெற வழக்கமான ஆவணங்கள் இருந்தாலே போதும், தமிழ்நாட்டை பொறுத்த அளவில் எந்த பிரச்னையும் இல்லை, இந்து, முஸ்லீம்கள் அமைதியாகத்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். மத நல்லிணக்கத்தோடு இருக்கின்ற தமிழ்நாட்டில் விஷ விதைகளை விதைக்கும் சதி வேலையில் ஸ்டாலின் ஈடுபடுகிறார் என அவர் குற்றம்சாட்டினார்.