தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை வரைவு மீது கருத்து கேட்பு - ஜவகர்நேசன் - Education editorial news

தமிழ்நாடு அரசால் உருவாக்கப்படும் மாநில கல்விக் கொள்கையை இறுதி செய்வதற்கு முன்னர் வரைவு அறிக்கை மீது பொதுமக்கள், கல்வியாளர்கள், பிற கல்வி சங்கங்கள் ஆகியோரின் கருத்துக்கள் கேட்கப்படும் என தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை உறுப்பினர் ஜவகர் நேசன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை வரைவு மீது கருத்து கேட்பு - ஜவகர்நேசன்
தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை வரைவு மீது கருத்து கேட்பு - ஜவகர்நேசன்

By

Published : Feb 9, 2023, 1:15 PM IST

தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை உறுப்பினர் ஜவகர் நேசன் அளித்த பிரத்யேக பேட்டி

சென்னை:தமிழ்நாட்டிற்கான தனிக் கல்விக் கொள்கை உருவாக்குவதற்காக டெல்லி உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த குழுவினர் கல்வியாளர்கள், ஆசிரியர் சங்கங்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பல தரப்பினரிடம் ஏற்கனவே கருத்துக்களைக் கேட்டுப் பெற்றுள்ளது.

அதனைத் தொடர்ந்து துணைக் குழுக்கள் அமைக்கப்பட்டு, அந்த குழுக்களும் ஏற்கனவே கூறப்பட்டுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக, அந்தந்த துறைகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை உறுப்பினரும், முன்னாள் துணைவேந்தருமான ஜவகர் நேசன் ஈடிவி பாரத் செய்திகளுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.

அப்போது பேசிய அவர், “மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்குவதற்கான குழு அமைக்கப்பட்டு 7 மாதங்கள் கடந்துள்ளன. தமிழ்நாட்டில் 8 மண்டலங்களில் பொதுமக்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள் என பல தரப்பினரிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து 13 துணை குழுக்கள் அமைக்கப்பட்டு, பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழிமுறைகள் கண்டறியும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தற்போது தமிழ்நாட்டில் வெவ்வேறு வகையான 50 பள்ளிகள், 15 கல்லூரிகள், வெவ்வேறு வகையான 5 பல்கலைக்கழகங்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், அதனை தீர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் நேரடியாக ஆய்வு செய்து வருகிறோம்.

பல்வேறு தரப்பு மக்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துக்களைக் கொண்டு கொள்கை உருவாக்கும் பணிகளை மேற்கொள்ள உள்ளோம். தமிழ்நாட்டிற்கான மாநிலக் கொள்கை வரைவு உருவாக்கப்பட்டு, அதன் மீது பொதுமக்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள் சங்கங்கள் உள்ளிட்ட பல தரப்பினரிடம் கருத்து கேட்கப்படும்.

அந்த கருத்துக்களையும் சேர்த்து தமிழ்நாட்டிற்கான மாநில கல்விக் கொள்கை இறுதி செய்யப்படும். அரசு அளித்த காலக்கெடு மே அல்லது ஜூன் மாதம் முடிவடையும். அதற்கு முன்னர் பணிகளை முடிப்பதற்கு முயல்கிறோம். தேவைப்பட்டால் அரசிடம் கால நீட்டிப்பு கோர உள்ளோம்.

அரசு அனுமதித்தால் அதையும் செய்யவும், அனுமதிக்காவிட்டால் அரசு அளித்த காலக் கெடுவுக்குள் பணிகளை முடிக்க முயற்சி மேற்கொள்வோம். தமிழ்நாட்டிற்கான மாநில கல்விக் கொள்கையில் பல்வேறு திட்டங்கள் செய்யப்பட உள்ளது. தமிழ்நாட்டில் கற்றல் விளைவுகள் சரியாக இல்லை என நாம் கருதுகிறோம்.

பள்ளிக்கல்வித்துறையில் ஓராசிரியர், ஈராசிரியர் பள்ளிகள் ஏராளமாக உள்ளன. மாணவர்களிடம் ஒழுக்க குணாதிசயங்கள் வெகுவாக குறைந்து வருகிறது எனவும், அவர்களை நல்வழிப்படுத்துவதற்கு ஆசிரியர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள் எனவும் கூறுகின்றனர்.

ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும் வேலைப் பளுவின் காரணமாக கற்றல் பணியில் சரியாக ஈடுபட முடியவில்லை என கூறுகின்றனர். இதுபோன்ற பல பிரச்னைகள் இருந்தாலும், சூழ்நிலையில் ஒட்டுமொத்த கல்வி மறுசீரமைப்பு செய்ய வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்.

நீட், கியூட் போன்ற மத்திய அரசின் தேர்வுகள் மட்டும் இல்லாமல் பல்வேறு பிரச்னைகள் இருப்பதால், முழுமையாக மறு சீரமைப்பு செய்ய வேண்டிய நிலை உள்ளது. தமிழ்நாட்டில் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் படித்தவர்களாகவும், அவர்கள் அந்த குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பதுடன் பயிற்சி வகுப்புகளுக்கும் அனுப்புகின்றனர்.

இதுபோன்ற சூழ்நிலையால்தான் அதிக அளவில் மதிப்பெண்கள் பெறுகிறார்கள் என ஆய்வில் கூறியுள்ளனர். அரசு பள்ளியில் இருக்கும் ஆசிரியர்கள் குறைவாகவும் குறைந்தவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. அரசுப் பள்ளியில் மாணவர்கள் படிக்க வருவதற்கு பல்வேறு காரணிகள் உள்ளன.

மாணவர்களின் சமூக பின்புலம், அவர்களுக்கு வீட்டில் எந்தவித பயிற்சியும் அளிப்பதற்கு வாய்ப்பு இல்லாதது போன்றவற்றால் மதிப்பெண்கள் குறைவாக பெறுகின்றனர். தனியார் பள்ளியில் ஆசிரியர்கள் குறைவான ஊதியம் பெற்றுக் கொண்டு கற்பித்தாலும், மாணவர்கள் அதிக அளவில் மதிப்பெண்கள் பெறுகின்றனர் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

இது போன்ற பிரச்னைகளை களைவதற்குத்தான் தீர்வுகளை ஆய்வு செய்து வருகிறோம். மாணவர்களுக்கு உயர் கல்வியில் சேருவதற்கான நீட், கியூட், ஜேஇஇ போன்ற பல்வேறு தேர்வுகளை வைக்கின்றனர். இதுபோன்று தேர்வுகளின் அடிப்படையில் உயர் கல்விக்கு செல்லும்போது மாணவர்கள்தான் கற்பதால், இந்த படிப்பிற்குச் செல்ல முடியாது என்ற நிலைக்கு வருகின்றனர்.

எனவே அவர்கள் பயிற்சிக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர். மாணவர்கள் பயிற்சிக்கு செல்லும்போது அறிவுத்திறன் எங்கிருந்து வரும்? எனவே நாங்கள் மாணவன் சிந்திக்கும் வகையில் அறிவுத்திறன் உள்ளவனாக வருவதற்கு ஏற்ப கல்விக் கொள்கையை உருவாக்கி வருகிறோம்.

மாணவர்கள் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு பெறுவதற்கு, அவர்களுக்குரிய செய்திகளை மட்டுமே வைத்து எழுதுகின்றனர். மனப்பாட அடிப்படையில் எழுதி பெரும் மதிப்பெண்கள் அறிவுப்பூர்வமாக இருக்காது. மாணவர்கள் செய்தியின் அடிப்படையில் தேர்வு எழுதுவதற்கு பயிற்சி மட்டும் போதும்.

எனவே அறிவுப்பூர்வமாகச் சிந்திக்கும் வகையில் உரிய கல்வியை அளிப்பதற்கு திட்டங்கள் வகுக்கப்படும். மாணவர்களுக்கான தேர்வு முறை நிர்ணயித்து அதனை சட்டமாக ஆக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு கிடையாது. தேர்வு முறை குறித்து மாநில அரசும் முடிவு செய்ய முடியாது.

அந்த மாநிலத்தில் உள்ள கல்வியாளர்கள், பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் ஆய்வு செய்து சரியானவற்றைச் செய்ய வேண்டும். மத்திய அரசு தேர்வு முறை குறித்து வழிகாட்டுதல்களை அளியுங்கள். அவற்றில் சரியானவற்றை நாங்கள் எடுத்துக் கொள்கிறோம். மத்திய அரசின் சட்டத்தில், எந்த இடத்திலும் தேர்வு முறை குறித்து கூறப்படவில்லை.

இந்தியாவில் எந்த கடைக் கோடியில் படிக்கும் மாணவரும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுதி தகுதி பெற வேண்டும் என மட்டுமே தற்போது வைத்துள்ளோம். அதுவே தற்போது வேறு மாநிலங்களில் சென்று உயர் கல்வி படிப்பதற்கும், வேலை வாய்ப்புக்கும் அளவுகோலாக இருக்கிறது.

5ஆம் வகுப்பு மற்றும் 8ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு வைக்க வேண்டும் என எந்த சட்டத்திலும் சொல்லவில்லை. எனவே அதனை நாங்கள் ஏற்க முடியாது. அதே நேரத்தில் மத்திய அரசின் விதிகளில் சரியாக உள்ளவற்றை நாங்கள் ஏற்றுக் கொள்வோம். தேசிய கல்விக் கொள்கையில் பல நல்ல செயல்கள் இருந்தாலும், அதில் உள்ள சில அம்சங்களால் அவற்றை ஏற்பதில் சிரமம் உள்ளது.

ஒரு பானை சோற்றில் ஒரு துளி விஷம் கலந்தாலும் அதனை பயன்படுத்த முடியாது. தமிழ்நாட்டில் பயிலும் மாணவர்களுக்கு சிறந்த அறிவு மற்றும் கற்றல் திறனை அளிக்கும் வகையில், தமிழ்நாடு அரசின் கல்விக் கொள்கை உருவாக்கப்படும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க:சென்னை ஐஐடி புது முயற்சி: 15-க்கும் மேற்பட்ட படிப்புகள் அறிமுகம்

ABOUT THE AUTHOR

...view details