செய்தியாளர்களிடம் பேசிய ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் மாயவன் சென்னை:வேலைக்கேற்ற ஊதியம் வழங்கக் கோரி, தமிழ்நாடு இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் 4ஆவது நாளாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அலுவலக வளாகத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை குறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா நேற்று (டிசம்பர் 29) சென்னை தலைமைச்செயலகத்தில் போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாமல் தோல்வியடைந்ததை அடுத்து போராட்டத்தை 4ஆவது நாளாக இன்றும் (டிசம்பர் 30) தொடர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த நான்கு நாட்களில் 103-க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் நிறுவனரும், ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளருமான மாயவன் உள்ளிட்ட நிர்வாகிகள் நேரில் சந்தித்து தங்களின் ஆதரவைத் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் மாயவன், 'சமவேலைக்கு சம ஊதியம் கேட்டு கடந்த 10 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் இதே கோரிக்கைக்காக போராடிய போது, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்து மு.க. ஸ்டாலின் ஆட்சி அமைந்த உடன் கோரிக்கை நிறைவேற்றப்படும் எனத் தெரிவித்தார். ஆனால், ஆட்சி அமைந்து 18 மாதங்கள் கடந்த பின்னரும் இவர்களின் கோரிக்கையை நிறைவேற்றவில்லை.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை அழைத்துப் பேசி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், இவர்களுக்கு ஆதரவாக எங்கள் சங்கமும் இணைந்து போராட்டத்தில் ஈடுபடுவோம். ஜாக்டோ ஜியோ அமைப்பும் இணைந்து போராடுவோம்' எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சம வேலைக்கு சம ஊதியம் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி 2009ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒன்றாம் தேதி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் போராடி வருகிறார்கள். ஊதியக்குழு அமைத்ததில் தங்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்று கடந்த 13 ஆண்டுகளாக தொடர்ச்சியாக அரசிடம் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் மிகப்பெரிய ஊதிய இழப்பை சந்தித்து, தங்களது வாழ்வாதாரம் மேம்பட தொடர்ச்சியாக களத்தில் நின்று போராடி வருகிறார்கள். 2018-ல் அவர்கள் நடத்திய போராட்டத்தில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, கலந்துகொண்டு அவர்களுடைய கோரிக்கைக்கு முழு ஆதரவு வழங்கினார்.
திமுக ஆட்சி அமைந்ததும் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் களையப்படும் என்று தேர்தல் அறிக்கையிலும் தெரிவித்திருந்தார். இது பாதிக்கப்பட்ட ஆசிரியர் தோழர்களிடையே மிகுந்த மன ஆறுதலையும் நம்பிக்கையும் ஏற்படுத்தியது. அனைவருக்கும் சமநீதியும், சம ஊதியமும் சமூக நீதியின் அடையாளங்களாக உள்ளது என்பதை உணர்ந்து முதலமைச்சர் தலையிட்டு, உடனடியாக தீர்வு காண வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கலெக்டர் ஆபிஸ் லிஃப்டில் சிக்கிய பொதுமக்கள்.. அடுத்தது என்ன?