தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஓய்வு பெறும் வயது உயர்வு...இட ஒதுக்கீட்டை பாதிக்கும்! - ஜாக்டோ ஜியோ கருத்து

சென்னை: ஆசிரியர்கள் -அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 59 என உயர்த்தியதால், இட ஒதுக்கீடு பாதிக்கப்படும் என ஜாக்டோ ஜியோ தெரிவித்துள்ளது.

ஒய்வு பெறும் வயது உயர்வு...இட ஒதுக்கீட்டை பாதிக்கும்!
ஒய்வு பெறும் வயது உயர்வு...இட ஒதுக்கீட்டை பாதிக்கும்!

By

Published : May 8, 2020, 11:24 AM IST

அரசு பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் உள்பட தமிழ்நாடு அரசு ஊழியர்கள் அனைவரின் ஓய்வு பெறும் வயது 59ஆக உயர்த்தப்பட்டு முதலமைச்சர் உத்தரவிட்டார்.

இது குறித்து ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் அறிக்கை ஒன்றினை வெளியிட்டனர். அதில், “ கரோனா பெருந்தொற்று ஏற்படுத்திய அசாதாரண சூழ்நிலையில், மாநில அரசின் நிதி நெடுக்கடியினைக் காரணம் காட்டி, ஏற்கனவே தமிழ்நாடு அரசு ஆசிரியர்கள்-அரசு ஊழியர்களின் சரண் விடுப்பு, அகவிலைப்படி நிறுத்தி வைப்பு, வருங்கால வைப்புநிதி வட்டி குறைப்பு போன்ற ஆசிரியர்-அரசு ஊழியர் விரோத நடவடிக்கையினை மேற்கொண்டது. தற்போது, அரசு ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெறும் வயதை 58 என்பதிலிருந்து 59 என உயர்த்தி தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கையானது எந்தவகையிலும் மாநில அரசின் நிதி நிலையினை மேம்படுத்தாது என்பதோடு மட்டுமல்லாமல், ஓராண்டிற்கு தற்போது வழங்க வேண்டிய ஓய்வூதியப் பலன்களைத் தள்ளிப் போடுவதற்கான ஒரு தற்காலிக நடவடிக்கை என்பதுதான் எதார்த்தம். மேலும், பதவி உயர்வினை எதிர்நோக்கியுள்ள காத்திருக்கும் ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் ஓராண்டு காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அரசின் இந்தப் போக்கானது, ஆசிரியர்-அரசு ஊழியர் என்ற சமூகத்தினையும் தாண்டி, தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பிற்காகக் காத்திருக்கும் இலட்சக்கணக்கான இளைஞர்களின் அரசுப் பணி கனவினை முற்றிலுமாக ஓராண்டிற்கு முடக்கும் நடவடிக்கை.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஓராண்டிற்கு எந்தவித பணி நியமன நடவடிக்கையினையும் மேற்கொள்ள இயலாத சூழ்நிலையினை உருவாக்கியுள்ளது. இந்த நடவடிக்கையானது, 2003ஆம் ஆண்டு அரசு வேலை நியமனத்தடைச் சட்டத்தை இயற்றி, ஐந்தாண்டுகளுக்கு அரசின் காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கு தடை விதித்ததைப்போல், ஓராண்டிற்கு அரசுப் பணிகளுக்கு தடை என்ற ஒரு நிலையினை தமிழ்நாடு அரசு மறைமுகமாக உருவாக்கியுள்ளது.

ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அலுவலர் ஆதி சேஷய்யா தலைமையில், காலிப் பணியிடங்களை தனியார் வசம் ஒப்படைப்பதற்கான ஒரு குழுவினை அரசாணை 56ன் கீழ் அமைத்து, அந்தக் குழு தமிழ்நாடு அரசிடம் அறிக்கையினை அளித்தது, இந்த பணியினை அரசு செயல்படுத்தியது. தற்போது, ஓய்வுபெறும் வயதினை 59 என உயர்த்தி அரசு அறிவித்துள்ளது என்பது, காலிப் பணியிடங்களை மொத்தமாக தனியார்வசம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை ஓராண்டிற்குள் செய்வதற்கான, காலஅவகாசமாக எண்ண வேண்டியுள்ளது.

இதன்மூலம் இந்தியாவிலேயே 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டின்மூலம் பாதுகாக்கப்பட்டுவரும் சமூக நீதி என்பது கேள்விக்குறியாகிவிடும். இளைஞர்களின் வேலைவாய்ப்பினை தள்ளிப் போட்டு, ஆசிரியர்-அரசு ஊழியர் பதவி உயர்வினை பாதுகாக்கும் வகையில், ஆசிரியர்-அரசு ஊழியர் ஓய்வுபெறும் வயதினை ஏற்கனவே உள்ள 58 வயது என நிர்ணயம் செய்து மீண்டும் முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட வேண்டும் ” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: 'அரசு தளர்வு அளித்தால் போதும்... நாங்கள் பாதுகாப்பாக சிகை திருத்துவோம்'

ABOUT THE AUTHOR

...view details