சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி, ராயபுரம் மண்டலம், வார்டு 60-க்கு உட்பட்ட அன்னை சத்யா நகரில் நடைபெற்ற மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமினையும், கொசுத் தடுப்பு நடவடிக்கைகளையும், இன்று (டிச.25) (திங்கள்கிழமை) மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, கூடுதல் ஆணையர் (சுகாதாரம்) சங்கர்லால் குமாவத், வடக்கு வட்டார துணை ஆணையர் கட்டா ரவி தேஜா, கூடுதல் மாநகர நல அலுவலர் டாக்டர்.லட்சுமி, மாமன்ற உறுப்பினர் ஆசாத் உட்படப் பலர் உடன் இருந்தனர்
இதன் பிறகு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், "மிக்ஜாம் புயல் மற்றும் கனமழைக்குப் பிறகு எந்தவொரு தொற்று நோயும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் பொதுமக்கள் அனைவரும் கவனக் குறைவாக இருக்கக் கூடாது என்ற காரணத்தினால், இந்த மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கனமழைக்குப் பின்பு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளான மருத்துவ முகாம்கள், மழைநீர் வடிந்த பகுதிகளில் சுத்தம் செய்யும் பணிகள் போன்றவற்றில் தனிக் கவனம் செலுத்திக் கண்காணிக்க அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில், நாள்தோறும் சராசரியாக 5 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு அப்புறப்படுத்தும் பணிகள், தூய்மைப் பணியாளர்களால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.