சென்னை: தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா இசை கவின்கலைப் பல்கலைகழகத்தின் இரண்டாம் பட்டமளிப்பு விழா சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவானர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழக முதலமைச்சரும், பல்கலைக்கழக வேந்தருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். பத்மவிபூஷன் பி.சுசீலா மற்றும் இசைக் கலைஞர் பி.எம்.சுந்தரம் ஆகிய இருவருக்கும் டாக்டர் பட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
முன்னதாக, மேடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “இரண்டு இசை மேதைகளுக்கு இன்று டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது. இந்த டாக்டர் பட்டம் அவர்களுக்கு வழங்கபடுவதால் இதன்மூலம் அந்த டாக்டர் பட்டமும் பெருமை அடைகிறது.
பாடகி பி.சுசீலா அவர்களின் குரலுக்கு மயங்காதவர்களே இருக்க முடியாது. அவரது குரலுக்கு மயங்கியவர்களில் நானும் ஒருவன். வெளியூர் பயணங்களின் போது என்னுடைய காரில் நான் அதிகமாக கேட்கும் பாடல் பி.சுசீலா அவர்களின் பாடல் தான்.
அவரது குரலில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் "நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை; உன் நினைவில்லாத இதயத்திலே சிந்தனை இல்லை; காயும் நிலா வானில் வந்தால் கண்ணுறங்கவில்லை; உன்னைக் கண்டு கொண்ட நாள் முதலாய் பெண்ணுறங்கவில்லை”. என்ற பாடல்.
எனக்கு மிகவும் பிடித்த பாடகி என்பதால் அவர் மேடைக்கு வந்த உடனே அம்மையாரை பார்த்தவுடன் வணக்கம் சொல்லிவிட்டு நான் உங்கள் ரசிகன் என்று வெளிப்படையாகவேச் சொன்னேன். பாடகி சுசீலா தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் பெரும் புகழைப் பெற்ற பாடகி என்றார்.