சென்னை: நேரு உள் விளையாட்டு அரங்கில் இந்திய கூடைப்பந்து கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் இணைந்து நடத்தும் தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பயன்ஷிப் போட்டி கடந்த சில நாள்களாக நடைபெற்றது.
ஆடவர் இறுதி போட்டி இன்று (ஏப்.10) நடைபெற்றது. இந்த இறுதி போட்டியில், பஞ்சாப் அணியை தமிழ்நாடு அணி எதிர்கொண்டு 18 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஒலிம்பிக் போட்டிக்கு ரூ.25 கோடி நிதி:இறுதிப் போட்டியை காண சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு பங்கேற்றார். அப்போது மேடையில் பேசிய அப்பாவு, ”தமிழ்நாடு விளையாட்டு வீரர்களை சர்வதேச அளவில் உயர்த்த வேண்டும் என்பதற்காக, கிராமப்புற இளைஞர்களுக்கு உதவியாக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் விளையாட்டு மைதானம் அமைக்க தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் வீரர்களுக்கு ரூ.25 கோடி நிதியாக முதலமைச்சர் ஒதுக்கியுள்ளது பெருமை கொள்ள வேண்டிய விஷயம். ஒலிம்பிக் போட்டிகளில் தமிழ்நாட்டு வீரர்கள் பங்கேற்க 4 அகாடமிகளை உருவாக்க முதலமைச்சர் உத்தரவிட்டு அந்த பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாட்டின் பாரம்பரிய சிலம்பாட்ட போட்டியை பாதுகாக்க, சிலம்பாட்ட வீரர்களுக்கு 3 சதவீதம் வேலை வாய்ப்பு வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் ரூ.700 கோடி மதிப்பீட்டில் 500 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச விளையாட்டு அரங்கம் அமைக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
சர்வதேச அளவிலான கூடைப்பந்து போட்டியை நடத்துவது தமிழ்நாட்டின் பெருமை எனவும் உலக அரங்கில் தமிழ்நாடு சிறந்த இடத்தை பிடித்துள்ளது என்பதை இது எடுத்துக்காட்டுகிறது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தற்காலிக பணியாளர்கள்தான் பலிகடாவா..? - மதுரை காமராஜர் பல்கலைக்கழக பாதுகாப்பு குழு கண்டனம்