சென்னை:திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான வீடு, அலுவலகம், கல்வி குழுமங்கள், மருத்துவமனைகள், கார்ப்ரேட் அலுவலகங்கள் உள்ளிட்ட சுமார் 90 இடங்களில் கடந்த ஐந்து நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்தனர்.
மேலும், இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்களும் கட்டுக்கட்டாக பணங்களும் சிக்கின. அதன் அடிப்படையில் ஜெகத்ரட்சகன், அவரது மகள் ஸ்ரீநிஷா, மருமகன் நாராயணசாமி இளமாறன், மற்றும் கல்வி குழும நிர்வாகி உள்ளிட்டோரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டனர்.
அதன் பிறகு ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் கைப்பற்றப்பட்ட கட்டு கட்டான பணங்கள், வெளிநாட்டு கைக்கடிகாரம், முக்கிய ஆவணங்கள் ஆகியவற்றை அட்டை பெட்டியில் அடைத்து வருமான வரித்துறை அதிகாரிகள் கொண்டு சென்றனர். இந்த நிலையில் திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மற்றும் அவரின் கல்வி நிறுவனங்கள், அறக்கட்டளையில் இருக்கக்கூடிய நிர்வாகிகள் மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்கள் வரும் சனிக்கிழமை அன்று நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என சம்மன் அனுப்பி உள்ளனர்.
சோதனைகள் முடிக்கப்பட்ட நிலையில், 4 நாட்கள் கழித்து சனிக்கிழமை அன்று ஜெகத்ரட்சகன் வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என அந்த சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் ஐந்து நாட்கள் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் சிக்கிய ஆவணங்களின் அடிப்படையில் சுமார் ரூ.1,050 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.