தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

3வது நாளாக தொடரும் ஐடி ரெய்டு! - வருமான வரித்துறை சோதனை

Income Tax raid: அரசு ஒப்பந்தம் மேற்கொள்ளும் கட்டுமான நிறுவனங்கள் தொடர்பான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் மூன்றாவது நாளாக தொடர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

income tax raid
வருமான வரித்துறை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 4, 2024, 6:30 PM IST

சென்னை:தமிழகத்தில் சென்னை உள்பட 7 மாவட்டங்களில் வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில், வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் தொடங்கி, 3வது நாளக தனியார் கட்டுமான நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், ஒப்பந்ததாரர்களின் வீடுகள் உள்பட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர்.

அதன்படி சென்னை, கோவை, ஈரோடு, விருதுநகர், சேலம், நாமக்கல் மற்றும் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் அரசு ஒப்பந்தங்களை எடுக்கும் தனியார் கட்டுமான நிறுவனத்திற்குச் சொந்தமான அலுவலகங்கள், நிறுவனத்தின் உரிமையாளர்களின் வீடுகள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

இந்நிலையில், நேற்று முன்தினம் தொடங்கிய இந்த சோதனை, மூன்றாவது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது. இதில் சென்னையில் மட்டும் அண்ணா நகர், அமைந்தகரை, எழும்பூர் உள்ளிட்ட சுமார் 10 இடங்களில் தனியார் கட்டுமான நிறுவனங்களுக்குத் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு இடம், பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் உள்ள கட்டுமானங்கள், கொச்சியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகம், ரயில்வே மற்றும் மெட்ரோ ஆகிய கட்டுமானப் பணிகளில் ஈடுபட்ட நிறுவனம் சி.எம்.கே ப்ராஜெக்ட் பிரைவேட் லிமிடெட். இந்த நிறுவனத்திற்குச் சொந்தமான அலுவலகங்கள், உரிமையாளர்கள் வீடு மற்றும் கார்ப்பரேட் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை செய்து வருகின்றனர்.

மேலும், சத்யியமூர்த்தி அண்ட் கோ நிறுவனம், கோவை எலன் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், கோவை காளப்பட்டியில் உள்ள கிரீன் பீல்ட் ஹவுசிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஆகியவற்றுக்கு தொடர்புடைய இடங்களிலும் அதிகாரிகள் தொடர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

மூன்று நாட்களாக தொடரும் இந்த சோதனையில் டிஜிட்டல் ஆவணங்கள், அரசு தொடர்பான கட்டுமானப் பணிகளை மேற்கொண்ட கோப்புகள் உள்ளிட்டவற்றை கைப்பற்றி, அது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இது குறித்து அதிகாரிகள் சிலர் கூறுகையில், அரசுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளும் கட்டுமான நிறுவனங்கள் முறையாக வருமான வரி செலுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் அடிப்படையில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர். மேலும் சோதனை இன்னும் நீளும் வாய்ப்பு இருக்கிறது எனவும், சோதனை நிறைவடைந்த பிறகு கைப்பற்றப்பட்ட பணம், ஆவணங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க:நடிகர் விஜயை நோக்கி காலணி வீசிய விவகாரம்: கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார்!

ABOUT THE AUTHOR

...view details