சென்னை: தமிழ்நாட்டின் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு-வின் வீடு, கல்வி நிறுவனங்கள், அறக்கட்டளைகள் உள்ளிட்ட அவருக்குத் தொடர்புடைய 80க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த நவம்பர் 3ஆம் தேதி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
நெடுஞ்சாலைத் துறை மற்றும் பொதுப்பணித் துறைகளுக்கு கொடுக்கப்படும் ஒப்பந்தங்களில் வரி ஏய்ப்பு மற்றும் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
அந்த வகையில், திருவண்ணாமலையில் உள்ள அருணை பொறியியல் கல்லூரி, கல்வி அறக்கட்டளை, அவரது வீடு உள்ளிட்ட இடங்களில் இன்று (நவ. 5) மூன்றாவது நாளாக வருமான வரித் துறை சோதனை நீடித்து வருகிறது. அதேபோல் கீழ்நாச்சிப்பட்டு பகுதியில் உள்ள அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் வீட்டிலும் மூன்றாவது நாளாக சோதனை தொடருகிறது.
கரூரில் முன்னாள் திமுக மாவட்டச் செயலாளர் வாசுகி முருகேசனுக்குச் சொந்தமான நான்கு இடங்களில் இரண்டு நாட்கள் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. அதேபோல் திமுக நிர்வாகி சக்திவேல் என்பவர் வீட்டிலும் இரண்டு நாட்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.