சென்னை: ராமநாதபுரத்தைச் சேர்ந்த அரசு ஒப்பந்ததாரரான செய்யாத்துரை, தனது எஸ்.பி.கே நிறுவனம் மூலமாக அதிகளவில் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக புகார் எழுந்தது. இதனையடுத்து செய்யாத்துரையின் வீடு மற்றும் அலுவலகம் இருக்கும் இடங்களான விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் சோதனை வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர்.
அதேபோல் முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான மற்றொரு அரசு ஒப்பந்ததாரரான சந்திரசேகரின் தொடர்புடைய இடங்களிலும் வரி ஏய்ப்பு காரணங்களுக்காக வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. இவ்வாறு இந்த இரு அரசு ஒப்பந்ததாரர்களுக்கு சொந்தமாக தமிழ்நாடு முழுவதும் உள்ள 40 இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில், இருவரும் சேர்த்து 500 கோடி ரூபாய்க்கு மேல் வருமானத்தை மறைத்து கணக்கு காட்டியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல்வேறு பொருட்களை வாங்கியதற்கு கணக்கு காட்ட போலி ரசீதுகளை பயன்படுத்தி இருப்பதும், அதன் மூலம் பெருமளவில் வருமானத்தை மறைத்திருப்பதும் வருமான வரித்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், சந்திரசேகருக்கு தொடர்புடைய இடங்களில் போலி ரசீதுகளை பயன்படுத்தி பல்வேறு துணை ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருமானத்தை ஈட்டியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், இதற்கு உண்டான ஆவணங்கள் மற்றும் பொய்யான பண பரிவர்த்தனைகள் அடங்கிய கோப்புகளை மறைத்து வைக்க ரகசிய இடத்தை பயன்படுத்தி வந்ததும் வருமான வரித்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கிடைக்கப்பெற்ற ஆவணங்கள் மூலம், இரு ஒப்பந்ததாரர்களும் சேர்ந்து கணக்கில் காட்டப்படாத 500 கோடி ரூபாய்க்கு மேல் வருமானத்தை மறைத்து வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதாக வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு விவகாரம்; சந்திரசேகர் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நிறைவு!