சென்னை:மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகம் போன்ற இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று (மே 26) காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, கோயம்புத்தூர், கரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த சோதனை தற்போது நடைபெற்று வருகிறது.
அதேபோல் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நெருங்கிய ஒப்பந்ததாரர் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், அரசு ஒப்பந்ததாரர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் என தமிழ்நாடு முழுவதும் 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அது மட்டுமல்லாமல், கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் என்பவரது வீட்டிலும் வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கோயம்புத்தூர் மாவட்டம் அவிநாசி சாலை கோல்ட்வின்ஸ் அருகே, சமீபத்தில் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த செந்தில் கார்த்திகேயன் என்பவரது வீட்டிலும், காலை 7.30 மணி முதல் சோதனை நடைபெற்று வருகிறது.
அதேபோல், அமைச்சரின் நெருங்கிய நண்பர்களாக கருதப்படும் கரூர் மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன் வீடு, ஒப்பந்ததாரர் சங்கரின் வீடு மற்றும் அலுவலகம், கொங்கு மெஸ் மணி வீடு உள்ளிட்ட இடங்களிலும் வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.