சென்னை:சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் அலுவலகம், நுங்கம்பாக்கம் காம்தார் நகரில் உள்ள அலுவலகம் உட்பட 10 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் இன்று காலை 5 மணி முதல் சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் அன்புச்செழியனுக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
குறிப்பாக நுங்கம்பாக்கம் காம்தார் நகரில் உள்ள வீட்டில் மேற்பட்ட வருமான வரித்துறை அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், சினிமா தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அலுவலகத்திலும் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை தியாகராய நகர் பிரகாசம் சாலையில் உள்ள கலைப்புலி தாணு அலுவலகத்தில் 10 க்கும் மேற்பட்ட அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் என்னும் பெயரில் சினிமா தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருபவர், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு. இவரது தயாரிப்பில் தீரன் அதிகாரம் ஒன்று, கைதி, சுல்தான் உள்ளிட்ட படங்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது அலுவலகத்திலும் வருமான வரித்துறையினரின் சோதனை நடைபெற்று வருகிறது.