இது தொடர்பாக அறிக்கை ஒன்றினை அவர் வெளியிட்டுள்ள அவர், அதில், ”மருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கும் விஷயத்தில் ஆளுநர் தொடக்கம் முதலே எதிர்மறையாகதான் செயல்பட்டு வருகிறார். இதே விவகாரத்தில் அவசரச் சட்டம் பிறப்பிக்கும்படி இரு முறை அமைச்சரவை பரிந்துரைத்தும் அதை ஆளுநர் ஏற்கவில்லை. பின்னர் சட்டப்பேரவையில் சட்டமியற்றி அனுப்பிய பிறகு கடந்த 5ஆம் தேதி முதலமைச்சரும் அமைச்சர்களும் ஆளுநரை சந்தித்து இச்சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். அதன்பின் 10 நாள்களாகியும் ஆளுநரிடமிருந்து பதில் இல்லை.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டால், நடப்பு ஆண்டில் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 400 மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கும். ஏழு தமிழர் விடுதலை குறித்த பரிந்துரையாக இருந்தாலும், 7.5 சதவிகிதம் இட ஒதுக்கீட்டு சட்டமாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கும் உணர்வுக்கும் எதிராக ஆளுநர் செயல்படுவது முறையல்ல.