தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Valarmathi Isro : சந்திரயான்-3இன் குரலாக இருந்த தமிழக பெண் விஞ்ஞானி மரணம்! அரசியல் தலைவர்கள், விஞ்ஞானிகள் இரங்கல்!

ISRO Valarmathi dead: சந்திரயான்-3 உள்ளிட்ட பல்வேறு விண்வெளி திட்டத்தில் ஏவப்பட்ட ராக்கெட்டுகளுக்கு கவுண்டவுன் குரல் கொடுத்த தமிழக விஞ்ஞானி வளர்மதி மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், விஞ்ஞானிகள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

Valarmathi
Valarmathi

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 4, 2023, 2:12 PM IST

சென்னை:ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் ராக்கெட்டுகளுக்கு கவுண்டவுன் குரல் கொடுத்து வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த வளர்மதி உடல்நலக்குறைவால் காலமானார்.

இஸ்ரோ விஞ்ஞானி வளர்மதி:அரியலூரை சொந்த ஊராக கொண்ட இவர் கோவை அரசு தொழிநுட்ப கல்லூரியில் உயர்கல்வியை முடித்தார். 1984 ஆம் ஆண்டு இஸ்ரோவில் விஞ்ஞானியாக சேர்ந்த இவர், கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழக அரசு சார்பில் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் விருது பெற்றார். கடந்த 6 ஆண்டுகளாக இஸ்ரோ ஏவிய முக்கிய உந்துகணை நிகழ்வுகளின் போது வளர்மதி வர்ணனையாளராக பணியாற்றி உள்ளார்.

சந்திரயான்-3 இன் குரலாக இருந்தவர்:50 வயதாகிய வளர்மதியின் குரலுக்கு பிரபல விஞ்ஞானிகளும் ரசிகர்களாக உள்ளனர். இத்தகைய குரலுக்கு சொந்தக்காரரான விஞ்ஞானி வளர்மதி, மாரடைப்பால் உயிரிழந்தார். 2012 ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட RISAT-1ன் திட்ட இயக்குநராகவும் செயல்பட்டு இருக்கிறார். தனது கம்பீரமான குரலுக்காக பலராலும் பாராட்டப்பட்டவர்.

அரசியல் தலைவர்கள் விஞ்ஞானிகள் இரங்கல்: கடைசியாக சந்திரயான் 3 விண்கலத்திற்கு வளர்மதி கவுண்டவுன் குரல் கொடுத்து இருந்தார். சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது செப்டம்பர் 2ஆம் தேதி விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல். சி- 57 ராக்கெட்டிற்கும் இவர் தான் குரல் கொடுக்க இருந்த நிலையில் உடல்நிலை குறைவால் அன்று வேறொருவர் குரல் கொடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் விஞ்ஞானிகள், பொதுமக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முன்னாள் இஸ்ரோ இயக்குநர் இரங்கல்: அந்த வகையில் வளர்மதியின் மறைவு குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள முன்னாள் இஸ்ரோ இயக்குநர் டாக்டர். வேங்கட கிருஷ்ணன், "ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இஸ்ரோவின் எதிர்கால பயணங்களின் கவுண்டவுன்களுக்கு வளர்மதி மேடத்தின் குரல் இனி இருக்காது. சந்திரயான் 3 அவரது இறுதி கவுண்டவுன் அறிவிப்பு. எதிர்பாராத மரணம் இது. மிகவும் வருத்தமாக இருக்கிறது" என்று பதிவிட்டு உள்ளார்.

டிடிவி தினகரன் இரங்கல்:அமமுக கட்சியின் பொதுச் செயலாளரான டிடிவி தினகரன், தனது ட்விட்டர் பக்கத்தில் "தமிழ்நாட்டைச் சேர்ந்த இஸ்ரோவின் ரேஞ்ச் ஸ்பீக்கர் வளர்மதி மாரடைப்பால் காலமான செய்தி வருத்தத்தையும் வேதனையையும் தருகிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும், ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அண்மையில் இந்தியாவின் பெருமையை உலகுக்கு உணர்த்திய சந்திராயன்- 3 விண்கலம் உட்பட கடந்த பல ஆண்டுகளாக இஸ்ரோ ஏவிய முக்கிய ராக்கெட்கள் ஏவுதலின் போது ஒலித்த விஞ்ஞானி வளர்மதியின் குரலை, அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது. விண்வெளி துறையில் இந்தியாவின் வளர்ச்சி இன்று பெருமளவு உயர காரணமான பெண் விஞ்ஞானிகளில் ஒருவரான வளர்மதியின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்" என குறிப்பிட்டு உள்ளார்.

இதையும் படிங்க:இஸ்ரோவுக்கான தமிழகத்தின் குரல் அடங்கியது... மிஷன் ரேஞ்ச் ஸ்பீக்கர் வளர்மதி மறைவு! மாரடைப்பால் உயிர் பிரிந்தது!

ABOUT THE AUTHOR

...view details