சென்னை:சென்னை ஐஐடி ஆக்மென்டட் ரியாலிட்டி, விர்ச்சுவல் ரியாலிட்டி, மிக்ஸ்டு ரியாலிட்டி (AR, VR, MR)-ஐப் பயன்படுத்தி இந்திய விண்வெளிப் பயணத் திட்டத்திற்கான பயிற்சித் தொகுதியை உருவாக்க உள்ளது. எக்ஸ்டெண்டட் ரியாலிட்டி தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் சென்னை ஐஐடியில் (IIT Madras) புதிதாக நிறுவப்பட்டுள்ள அனுபவமிக்க தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு மையத்தின் உயர் தொழில்நுட்பங்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பயன்படுத்திக் கொள்ளும். இந்திய மனித விண்வெளிப் பயணத் திட்டத்தில் (Indian Human Space Mission) எக்ஸ்டெண்டட் ரியாலிட்டி மற்றும் இதர தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது தொடர்பாக இஸ்ரோ, சென்னை ஐஐடி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
இதுகுறித்து எக்ஸ்டிஐசி, சென்னை ஐஐடியின் கொள்கை ஆய்வாளரும், மெட்ராஸ் அப்ளைடு மெக்கானிக்ஸ் துறையின் பேராசிரியர் மணிவண்ணன் கூறுகையில், ’மனித விண்வெளிப் பயணத் திட்டத்தின் பல்வேறு அம்சங்களில் குறிப்பாக வடிவமைப்பு சுழற்சியைக் குறைத்தல், விண்வெளிச் சூழலை உருவகப்படுத்துதல் போன்றவற்றில் மதிப்புக் கூட்டும் ஆற்றல் எக்ஸ்ஆர் தொழில்நுட்பத்திற்கு உண்டு’ என்றார். மேலும் அவர், ’உடலியல் அமைப்புகளின் மாதிரிகள், வடிவமைப்பை மேம்படுத்துதல் போன்ற ஆய்வுகளுடன் இதனைத் தொடங்க உள்ளதாகவும், சென்னை ஐஐடி சுற்றுச்சூழல் அமைப்பானது ஆராய்ச்சிக்கு மட்டுமின்றி தொழில்துறை கூட்டமைப்பு மேம்பாட்டிற்கும் உகந்ததாக இருந்து வருவதாகவும்’ தெரிவித்தார்.
இஸ்ரோவின் மனித விண்வெளி விமான மைய (HSFC) இயக்குநர் உமா மகேஸ்வரன் கூறுகையில், ’விண்வெளித் திட்டம் என்பது கல்வியாளர்களுடன் தொடர்பு உடைய ஒன்று எனவும், மனித விண்வெளிப் பயணத் திட்டம் உள்ளிட்ட இஸ்ரோவின் திட்டங்களில் சென்னை ஐஐடி நீண்ட காலமாக தனது பங்களிப்பை வழங்கி வருகிறது’ எனவும் தெரிவித்தார்.
’இந்த மனித விண்வெளிப் பயணத் திட்டத்திற்கான (Space Flight Programme) எக்ஸ்ஆர் தொழில்நுட்பங்களை உருவாக்குவது மட்டுமின்றி, மனித விண்வெளி விமான மையத்தில் சம்மந்தப்பட்ட பொறியாளர்களுக்கு அதற்கான பயிற்சியை அளிப்பதுடன், மனித விண்வெளி விமான மையத்தில் உள்ள ஆய்வகத்தில் எக்ஸ்ஆர், விஆர் பரிசோதனைக் கூடத்தை அமைக்கவும் எக்ஸ்டிஐசி (XTIC) உதவும்’ என்றும் தெரிவித்தார்.