தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த ஆண்டு மே மாதம் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தை கட்டுப்படுத்த நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை மூட கடந்த ஆண்டு மே மாதம் 28ஆம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. அதன் பின்னர், ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கடந்த டிசம்பர் மாதம் 15ஆம் தேதி உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதித்த தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி தமிழக அரசு சார்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிட்ட பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு தடை விதித்தது. தேவைப்பட்டால் வேதாந்தா நிறுவனம் உயர்நீதிமன்றத்தை அணுகலாம் எனவும் உத்தரவில் குறிப்பிட்டனர். இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கேட்டு வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. ஆலை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம், வேதாந்தா நிறுவனத்துக்கு எதிரான போராட்டத்தின் பின்னணியில் சீனா உள்ளது என குற்றம் சாட்டியுள்ளார்.
உலக அளவில் 38 சதவிகிதம் செம்பு உற்பத்தியில் முன்னனி வகிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூடினால் பல வெளிநாட்டு நிறுவனங்கள் பயன்பெறும் என்பதால் திட்டமிட்டு போராட்டம் நடத்தப்பட்டு ஆலை மூடப்பட்டது. இதனால் 200 கோடி ரூபாய் மதிப்பிலான செம்பு வர்த்தக லாபம் வெளிநாட்டு நிறுவனத்துக்கு நேரடியாக செல்லும். ஆலையினால் ஏற்பட்ட மாசு காரணமாக மூட தமிழக அரசு உத்தரவிடவில்லை. மக்களின் போராட்டத்திற்கு பின்னரே ஆலையை மூட உத்தரவிடப்பட்டது. தற்போது ஆலை மாசுபாடு காரணமாக மூடப்பட்டது என தமிழ்நாடு அரசு கூறுகிறது. மாசுபாடு காரணமாக யாரும் இதுவரை உயிரிழக்கவில்லை. எந்த பாதிப்பும் அந்த பகுதியில் ஏற்படவில்லை. மாசுகட்டுப்பாட்டை சரிசெய்ய வேண்டும் என்ற எந்த நோக்கமும் மாசுகட்டுப்பாட்டு வாரியத்துக்கு இல்லை, அரசியல் காரணங்களுக்காகவே நடவடிக்கை எடுத்துள்ளது.
1995க்கு பிறகு உற்பத்தியை அதிகரிக்க ஒவ்வொரு முறையும் மாசுகட்டுப்பாட்டு வாரியத்திடம் முறைப்படி அனுமதி பெறப்பட்டது. 1997ல் தமிழ்நாடு அரசு அமைத்த குழு, சுற்றுச்சூழல் மாசுபாடும், காற்று மாசுபாடும் ஏற்படவில்லை என அரசுக்கு அறிக்கை அளித்துள்ளது. ஆலையில் இருந்து எந்த கழிவுகளும் வெளியேற்றப்படவில்லை, கழிவுகளை மறு சுழற்சி செய்து மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்டது. ஆலையில் இருந்து கேஸ் வெளியேறுவதாக கூறப்பட்ட புகாரில், ஆலையில் இருந்து கேஸ் வெளியேறவில்லை என தமிழ்நாடு அரசு அமைத்த குழு தெளிவாக கூறியுள்ளது. ஆனாலும் ஆலை இரண்டு மாதம் மூடப்பட்டது.
1998ல் ஆலையை மூட பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்த உயர்நீதிமன்றம் ஆலையில் இருந்து எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெளிவுபடுத்தியுள்ளது. 2011ல் உச்சநீதிமன்றம் அமைத்த குழு ஆலையில் ஆய்வு செய்ததில் எந்த காற்று, நிலத்தடிநீர் மாசுபாடும் ஏற்படவில்லை. அதனடிப்படையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மீண்டும் ஆலை செயல்பட அனுமதி வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 1995ல் இருந்து ஆலை நிர்வாகத்தால் பெண்களுக்கு கருகலைந்ததாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். ஆனால் மருத்துவ ரீதியாக அதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை. உச்சநீதிமன்ற உத்தரவில் ஆலையை சுற்றி 26 சதவிகிதம் பசுமை மண்டலமாக வைத்திருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 30 வழிமுறைகள் அடிப்படையில் ஆலை இயங்குகிறது என வாதம் செய்தார். இதையடுத்து வழக்கு விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டது.