சென்னை: பூகம்பம் ஏற்படும்போது, பாதுகாத்துக்கொள்ளும் வகையில், அதிலிருந்து காத்துக்கொள்ள எவ்வாறு கட்டுமானங்களை நிறுவ பெற வேண்டும் என்பது குறித்து சென்னை கட்டுமானப் பொறியாளர் சங்கத்தின் தலைவர் சீனிவாசன் மற்றும் சென்னை கட்டுமானப் பொறியாளர் சங்கத்தின் கட்டட வல்லுநர் கார்த்திகேயன் ஆகியோர் தமிழ்நாட்டில் நிலநடுக்கம் வருமா? அல்லது வராதா என்பது குறித்து சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் விளக்கமளித்துள்ளனர்.
அப்போது பேசிய அவர்கள், ''சிரியா மற்றும் துருக்கியில் நில நடுக்கம் ஏற்பட்ட பின்னர், அடுக்குமாடி கட்டடங்கள் இடிந்து விழுந்தது. இந்தியாவில் சில பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புண்டு. அதனை 5 பகுதிகளாகப் பிரித்துள்ளனர். எனவே, நிலநடுக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் கட்டடங்களை கட்ட வேண்டும்.
நிலநடுக்கம் ஏற்படும் பகுதியில் தமிழ்நாடு 2வது மண்டலத்தில் உள்ளது. சென்னை 3-வது மண்டலத்தில் உள்ளது. சென்னையில் கட்டடங்களை கட்டும்பொழுது மண் பரிசோதனை கண்டிப்பாக செய்ய வேண்டும். வீடு கட்டும்போது அதற்கான வரைபடங்கள் சரியாக போடப்பட்டு, நில நடுக்கத்தை தாங்கும் வகையில் வடிவமைப்பு இருக்க வேண்டும்.
குறிப்பாக கட்டடத்தின் அடித்தளம் மற்றும் காலம்ன்கள்(தூண்கள்) தேவையான இடங்களில் சரியாக அமைக்கப்பட வேண்டும். கட்டடங்களில் அழகு வேண்டும் என்பதற்காக தேவையான இடங்களில் தூண்களை அமைக்காமல் விட்டுவிடக் கூடாது.
அதேபோல், வீடுகளை கட்டி முடித்தவுடன் உரிய பராமரிப்பு செய்யப்பட வேண்டும். சென்னை மாநகரம் முழுவதும் களிமண் தன்மை கொண்டது. ஒரு பாத்திரத்தில் தயிரை ஊற்றி அதன் மேல் ஒரு நாணயத்தை வைத்தால் எப்படி நிற்குமோ, அதுபோலவே களிமண் மீது சென்னை உள்ளது.