சென்னை:தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மீன்வள அறிவியல் (BFSc.) பாடப்பிரிவில் மாணவர்கள் சேர்க்கையில் முறைகேடு நடந்துள்ளதை அடுத்து 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால், பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சேர்வதற்கு முறைகேடான வழிமுறைகளை அனுமதித்த மாணவர்கள் சேர்க்கைக்குழுவின் மீது கடுமையான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாமல் உள்ளனர். முதலாம், இரண்டாம் ஆண்டில் படித்து வரும் மாணவர்கள் கட்-ஆப் மதிப்பெண்கள் குறைவாக பெற்று முறைகேடாக சேர்ந்துள்ளனரா என்பதற்காக விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் (TNJFU) தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் 2012ஆம் ஆண்டில் தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகச் சட்டம் 2012இன் படி நிறுவப்பட்டது. இந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் 6 உறுப்புக் கல்லூரிகளில் மீன்வள அறிவியலில் 120 இடங்கள், மீன்வளப் பொறியியலில் 30 இடங்கள், ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியலில் 20 இடங்கள், மீன்வள உயிர்த் தொழில்நுட்பம் மற்றும் உணவுத் தொழில்நுட்பத்தில் தலா 40 இடங்கள் என மொத்தம் 250 இடங்கள் உள்ளது. மேலும் மீனவ சமூக மாணவர்களுக்கென மீன்வள அறிவியலில் 24 இடங்கள் சிறப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2019 முதல் முறைகேடு:இந்தப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சேர்க்கையின்போது குறைவான மதிப்பெண் பெற்றவர்களை சேர்த்துள்ளதாக புகார்கள் அரசிற்கு வந்துள்ளது. அதன் அடிப்படையில் அரசு ஆய்வு செய்தபோது, முறைகேடாக மாணவர்கள் சேர்க்கையில் இட ஒதுக்கீடு வழங்கியது கண்டறியப்பட்டு உள்ளது. அதன் பின்னர், 2019ஆம் ஆண்டு முதல் மாணவர்கள் சேர்க்கை குறித்து விரிவான விசாரணையை நடத்துவதற்கு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் எஸ்.பழனிசாமி தலைமையில் குழு அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
சஸ்பெண்ட்:இதன் முதற்கட்ட விசாரணையில் பல்கலைக்கழகத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட பல்கலைக்கழகத்தின் ஊழியர்கள் 2 பேரை அதிரடியாக சஸ்பெண்ட் செய்துள்ளனர். மேலும் 30க்கும் மேற்பட்ட மாணவர்களின் பெற்றோர், தங்களது குழந்தைகள் குறைவான மதிப்பெண்கள் பெற்றது தெரிந்தும், முறைகேடாக பணம் கொடுத்து சீட் வாங்கி உள்ளதும் தெரிய வந்துள்ளது. இதனால் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது.
பெற்றோர் மற்றும் மாணவர்கள் மீதுநடவடிக்கை:மாணவர்கள் சேர்க்கையில் முறைகேட்டில் ஈடுப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும், பிற மாணவர்களின் கல்வியை பணத்தைக் கொடுத்து பறித்த மாணவர்களின் உண்மை சான்றிதழ் காண்பிக்கும்போது தவறுகள் இருந்தால், அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், முறைகேடாக தங்களின் குழந்தைகளின் படிப்பிற்காக பெற்றோர் பணம் அளித்தது உறுதி செய்யப்பட்டால் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டு, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்
மாணவர்களின் தவறு உறுதி செய்யப்பட்டால் அவர்கள் தொடர்ந்து படிப்பதற்கும் அனுமதிக்கப்படமாட்டார்கள். தமிழ்நாடு அரசின் சார்பில் நியமனம் செய்யப்பட்ட குழுவின் அறிக்கை விரைவில் சமர்பிக்கப்பட உள்ள்து. அதன் அடிப்படையில், கடுமையான தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என கால்நடை, பால்வளம் மற்றும் மீன்வளத்துறைத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.