சென்னை:இந்திய கடல் எல்லையான அந்தமானை அடுத்த இந்திரா பாயின்ட் பகுதியில் சிறிய ரக கப்பல் ஒன்று அத்துமீறி நுழைந்துள்ளதாக, கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு கடலோர பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் அப்பகுதிக்குச் சென்ற கடலோர பாதுகாப்புப் படையினர், அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்த சிறிய ரக கப்பலை சுற்றிவளைத்து கப்பலை சோதனையிட்டனர்.
அப்போது அந்த கப்பலில் 11 ஈரானியர்கள் பயணம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அடுத்த நாளான சனிக்கிழமை அதிகாலை பிடிபட்ட படகுடன், 11 ஈரானியர்களையும் காசிமேடு மீன்பிடித் துறைமுகத்திற்கு அலுவலர்கள் அழைத்து வந்தனர். முன்னதாக கடலோர பாதுகாப்புப் படையினரால் அளிக்கப்பட்ட தகவலின்பேரில், காசிமேடு மீன்பிடித்துறைமுகத்தில் மத்திய போதைப் பொருள் தடுப்பு புலனாய்வுப் பிரிவு அலுவலர்கள் உள்பட 200-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் துப்பாக்கிகளுடன் காத்திருந்தனர்.