சென்னை:ரயில் நிலையங்களில் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஐபி பேஸ்ட் வீடியோ சர்வேலன்ஸ் (IP-based video surveillance)எனும்இணைய வழியில் இணைக்கப்பட்டுள்ள கண்காணிப்புக் கேமராக்கள் நாட்டில் உள்ள 813 ரயில் நிலையங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கேமராக்களை குறிப்பிட்ட ரயில் நிலையத்திலிருந்து கண்காணிக்க முடியும். ரயில் நிலையத்தின் தலைமையகம் மற்றும் மண்டல தலைமை அலுவலகத்தில் இருந்தும் கண்காணிக்க முடியும். மேலும், குறிப்பிட்ட அலுவலர்கள் தங்களது செல்போனிலிருந்தும் இதனைப் பார்க்கும் வசதியுள்ளது.
ரயில் டெல் எனப்படும் பொதுத்துறை நிறுவனத்துடன் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மேலும் 47 ரயில் நிலையங்களிலும் இந்த வசதி விரைவில் ஏற்படுத்தப்படவுள்ளது. அடுத்தகட்டமாக, 2022க்குள் 756 பெருநகர ரயில் நிலையங்களில் இணைய வசதிகொண்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள 5 ஆயிரம் ரயில் நிலையங்களில் இதுபோன்ற கேமிராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களில் டூம், பேன்- டில்ட் ஜூம், 4கே, புல்லட் (Dome, Pan–tilt–zoom camera, 4k, Bullet) என நான்கு வகையிலான கேமிராக்கள் பொருத்தப்படுகின்றன. இதன் வாயிலாக ரயில் நிலைய பாதுகாப்பு, பெண்களின் பாதுகாப்பு அதிகரிக்கும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: நாடு முழுவதும் 6,000 ரயில் நிலையங்களில் இலவச வைஃபை!