சென்னை கீழ்பாக்கத்தில் கேஜே மருத்துவ ஆராய்ச்சி மற்றும் முதுகலை படிப்பு மையத்தில் கரோனா தொற்று பாதிப்பை எளிய முறையில் கண்டறிவதற்கான நானோ தொழில்நுட்ப முறையில் புதிய கருவியினை கண்டு பிடித்துள்ளனர். கை வடிவில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கருவி சென்சாரில் பொருத்தப்பட்டு, லேப்டாப்பில் இணைக்கப்பட்டுள்ளது.
இதில் ஐந்து விரல்களும் பதியும் வண்ணம் பொருத்தியப் பின், அடுத்த இரண்டு நிமிடங்களில் ரத்த அழுத்தம், ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவு, உடல் வெப்பநிலை, ஹூமோகுளோபின், ரத்த செல்களின் அளவு , ஜீட்டா பொட்டென்சியல் ஆகியவை கண்டறியப்படுகிறது. இந்த அளவுகளில் ஜீட்டா பொட்டென்சியல் அடிப்படையில் பரிசோதனையில் ஈடுபட்ட நபருக்கு கரோனா தொற்று பாதிப்பு உள்ளதா? இல்லையா? என்பதை கண்டறிகின்றனர்.
இது குறித்து கேஜே ஆராய்ச்சி நிறுவனத் தலைவர் கேசவன் ஜெகதீசன் கூறும்போது, "கரோனா தொற்று பாதிப்பினை இரண்டு நிமிடங்களில் கண்டறியும் வகையில் புதிய கருவியை கண்டறிந்துள்ளோம். இந்தக் கருவியை அரசு மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளிடம் பரிசோதனை மேற்கொண்டதில் துல்லியமாக 100 சதவீதம் கரோனா நோய் பாதிப்பினை கண்டறிய முடிந்தது.
2 நிமிடங்களில் துல்லிய கரோனா பரிசோதனை செய்யும் கருவி நோய் தொற்று இல்லாவர்களுக்கும் தொற்று இல்லை என்பதை உறுதியாக கூற முடிந்தது. இந்த பரிசோதனை ஆர்டிபிசிஆர் பரிசோதனையை விட மிகவும் எளிதாகவும், விரைவாகவும் செய்ய முடிந்தது. இதனால் நோயால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக கண்டறிந்து தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க முடியும். அதன் மூலம் நோய் பரவலை கட்டுப்படுத்தலாம்.கரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் சூழ்நிலையில், புதிய கருவியை உற்பத்தி செய்தால் அதிகளவில் தொற்று பரவலை தடுக்க முடியும் என்றார்.
கேஜே ஆராய்ச்சி மருத்துவமனையின் ஆராய்ச்சி மாணவி தேஜஸ்வீ கூறும்போது, இந்த புதிய கருவியின் மூலம் கரோனா தொற்றினை எளிதில் கண்டறிய முடியும் .ஏற்கனவே புற்றுநோய் கண்டறிவதற்கான ஆராய்ச்சியில் ஈடுப்பட்டு வந்தோம் .இந்த நிலையில் கரோனா தொற்று பாதிப்பு அதிகளவில் ஏற்படவே, எலக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி இந்த கருவியை வடிவமைத்துள்ளோம் என்றார்.
ஆராய்ச்சி மருத்துவமனையின் தொழில்நுட்ப பணியாளர் அருண், இந்த கருவியின் செயல்பாட்டின் மூலம் விரைவில் நோய் தொற்றை கண்டறிய முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.