தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'யாவரும் கேளீர்'... இன்று சர்வதேச குடும்ப தினம்!

சந்தோஷங்கள், சிறு சிறு சண்டைகள், சமாதானங்கள் என அனைத்தும் நிறைந்த அற்புத அமைப்பான குடும்பங்களைக் கொண்டாடும் சர்வதேச குடும்ப தினம் இன்று. குடும்பங்களின் மகத்துவம் பற்றிக் காணலாம்.

International family day

By

Published : May 15, 2019, 2:36 PM IST

Updated : May 15, 2019, 4:09 PM IST

குழந்தைகளுக்கு அன்பைக் கொடுப்பதற்கு அன்னை, தைரியம் கொடுப்பதற்கு தந்தை, அறிவைக் கொடுப்பதற்கு தாத்தா-பாட்டி, பண்பைக் கற்றுத்தர சித்தப்பா, சித்தி, அத்தை, மாமா, பெரியப்பா, பெரியம்மா என கூட்டுக் குடும்பங்களாக நிறைந்திருந்த நமது நாடு, தற்போதைய காலக்கட்டத்தில் சிட்டுக்குருவி இனம் அழிந்து போனதைப் போல குடும்ப அமைப்புகளும் சிதைந்துபோயின. இன்று மே 15 சர்வதேச குடும்ப தினம் என்பதையே நாம் சமூக வலைதளங்களைப் பார்த்துத்தான் அறிந்து கொள்ள வேண்டும் என்ற அவல நிலை உருவாகிவிட்டது.

'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்று குடும்பங்களின் பெருமையை உலகிற்கு ஓங்கி உரைத்தது தமிழர் பண்பாடு. ஆனால் கொடுங் கலாசார காற்று வேகத்தில் கரையும் மேகம் போல பாழாகிப்போகின நமது பழம்பெருமை. தற்போது பொருளாதாரத் தேடலுக்காக கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து, தனித்தனிக் குடும்பங்களாக வாழ்வது காலத்தின் காட்டாயமாகிவிட்டது.

சர்வதேச குடும்ப தினம்

இந்தச்சூழலில் குடும்பங்களின் முக்கியத்துவத்தை அனைவரும் உணர்வதற்காக மே 15ஆம் தேதியை சர்வதேச குடும்ப தினமாக, 1992ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. இக்காலக்கட்டத்தில் தனிக்குடும்பங்கள், முதியோர் இல்லத்தில் வயோதிக தாய் தந்தை, அலுவலகப் பணியால் தனித்துவிடப்பட்ட குழந்தைகள், காதல் திருமணம் செய்துகொண்டு சில மாதங்களிலேயே விவாகரத்து பெரும் தம்பதியர் என கூட்டுக் குடும்பம் என்பதே கானல் நீராகிவிட்டது.

கண்களை மறைத்துக் கொண்டு வெளிச்சத்தை தேடுவதைப்போல, மனிதன் தனது மகிழ்சியை முகநூல், கட்செவிஅஞ்சல் (வாட்ஸ்அப்) போன்ற சமூக வலைதளங்கள், திரையரங்குகள், பூங்காக்கள், கடற்கரை ஆகிய இடங்களில் தேடி அழைகிறான். ஆனால் உண்மையான மகிழ்ச்சி குடும்பங்களில்தான் இருக்கிறது என்பதை உணர மறக்கிறான். அழகில்லை என்று ஆயிரம் பேர் கூறினாலும் பேரழகு என் பிள்ளை என்று பேணி வளர்ப்பவள் அன்னை. உன்னத எண்ணத்தோடு உதிரத்தைப் பாலாக்கி உயிர் கொடுத்து இந்த உலகைக் காட்டியவள் அன்னை. அப்படிப்பட்ட தாயின் மடியில் தலைவைத்திருப்பதை விட பெரிய மகிழ்ச்சி எங்கு கிடைத்துவிடப் போகிறது.

இதனால் தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது என்றார் நபிகள் நாயகம். தான் பார்க்காத இந்த உலகத்தை தன் மகன் பார்க்கட்டும் என தூக்கிப்பிடிக்கும் தந்தையின் அன்பை விட மகிழ்ச்சி வேறேதும் உண்டோ!

சர்வதேச குடும்ப தினம்

பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக, தன் குடும்பத்தைப் பிரிந்து வெளிநாடு சென்ற தந்தை, தனது மகளுக்கு விலை உயர்ந்த ரிமோட் காரை வாங்கி அனுப்பிவைத்தார். அதைப்பார்த்து பூரிப்படைந்த குழந்தை, மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்துக் கொண்டு, தனது பக்கத்து விட்டுச் சிறுமியிடம் காட்டுவதற்காக ஓடியது. வீட்டிற்குள் இருந்த அந்த சிறுமியை அழைத்து, 'இதோ பார், என் அப்பா வாங்கி அனுப்பிய கார் என்னிடம் இருக்கிறது' என கூறியது. அதற்கு பக்கத்து வீட்டுச் சிறுமி, 'என் அப்பா என்னிடம் இருக்கிறார்' என்று கூறிவிட்டு வீட்டிற்குள் சென்றது. அந்தக் குழந்தையின் மனம் நொறுங்கிப்போனது.

பணத்திற்காக குடும்பங்களைப் பிரிந்து வெகுதூரம் செல்லும்போது, நாம் குடும்பங்களை மட்டும் பிரிந்து செல்லவில்லை. அன்பு, பாசம், நேசம், மனிதம் என அனைத்தையும் தூரமாக்கிவிட்டுச் செல்கிறோம் என்பதை அனைவரும் உணர வேண்டும்.

Last Updated : May 15, 2019, 4:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details