அரசு மருத்துவர்களுக்கான சட்ட போராட்டக் குழுவின் தலைவர் பெருமாள் பிள்ளை செய்தியாளர்களிடம் கூறியதாவது, "கரோனா தொற்று பாதிப்பை கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு முன்மாதிரியாக திகழ்கிறது என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் பாராட்டியுள்ளது.
அரசு மருத்துவர்களின் 4 அம்ச கோரிக்கை
அரசு மருத்துவர்கள் நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டோம். அதில் அரசாணை 354இன் படி தகுதிக்கு ஏற்ப ஊதியம் வழங்கப்பட வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்களின் பணியிடங்களையும் ஏற்படுத்த வேண்டும். அரசு மருத்துவர்களுக்கு பட்ட மேற்படிப்பில் 50 விழுக்காடு இட ஒதுக்கீடு மீண்டும் வழங்க வேண்டும். மருத்துவ பட்ட மேற்படிப்பு முடிக்கும் மருத்துவர்களுக்கு ஏற்கனவே நடைபெற்றது போல் கலந்தாய்வு நடத்தி அதன் மூலம் பணி நியமனம் வழங்க வேண்டும்.
118 மருத்துவர்கள் பணியிட மாற்றம்
அண்டை மாநிலமான கர்நாடகாவில் மருத்துவர்கள் போராடும் முன்னரே ஊதிய உயர்வு கொடுத்துள்ளனர். மருத்துவர்களின் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆண்டு போராட்டம் நடத்தினோம். அரசின் கோரிக்கையை ஏற்று எங்கள் போராட்டத்தை திரும்பப் பெற்றோம். போராட்டத்தில் ஈடுபட்டதற்காக 118 மருத்துவர்களுக்கு தண்டனையாக பணியிடமாற்றம் செய்யப்பட்டதுடன் 17b குற்ற குறிப்பாணை அளிக்கப்பட்டது.
மருத்துவர்களுக்கு உரிய சம்பளம் வழங்கவில்லை மருத்துவர்களுக்கு உரிய சம்பளம் வழங்கவில்லை
சிலருக்கு 8 மாதங்கள் கடந்து பணியிடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் 40 பெண் மருத்துவர்கள் உள்ளிட்டவர்களுக்கு தண்டனையாக பணியிடமாற்றம் வழங்கப்பட்டது. இதனால் மனமுடைந்த மருத்துவர் சங்கத்தலைவர் நரசிம்மன் உயிரிழந்தார். தமிழ்நாடு பிற மாநிலங்களை விட சிறப்பாக செயல்படுகிறது என சுகாதாரத்துறை அமைச்சரும், முதலமைச்சரும் தெரிவிக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு உரிய சம்பளம் வழங்குவது இல்லை. எனவே அரசு மருத்துவர்களின் 4 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும் என கோரிக்கை" விடுத்தார்.
இதையும் படிங்க:வேதாரண்யத்தில் ஆயத்த ஆடை பூங்கா!