சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் நான்கு நாள் பயணமாக கடந்த மார்ச் 24ஆம் தேதி துபாய் சென்றார். இந்தநிலையில் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஸ்டாலினின் துபாய் வெளிநாட்டு பயணம் குறித்து இன்று (மார்ச் 27) விமர்சனம் செய்திருந்தார்.
இதற்கு தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு துபாயிலிருந்து வீடியோ பதிவு மூலம் பதிலளித்துள்ளார். அதில் கூறியுள்ளதாவது, "திமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஸ்டாலினின் துபாய் வெளிநாடு பயணம் குறித்து இன்று விமர்சனம் செய்து செய்தியாளர்களைச் சந்தித்தார்.
முதலமைச்சரின் துபாய் பயணத்தின் நோக்கம்
முதலமைச்சரின் விமானப்பயணம் தனி விமானத்தில் மேற்கொள்ளப்பட்டிருப்பது, அவர் பயணம் மேற்கொள்ள கூடிய சூழ்நிலையில் அந்த விமானத்தில் போதுமான வசதிகள் இல்லாததால் தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு பயணம் மேற்கொண்டார்.
தனி விமானம் பயணம் செய்வதற்கான செலவுகளை திமுக தான் ஏற்றுக்கொண்டதே தவிர, இது அரசின் நிதி அல்ல எனத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் இரண்டாவதாக, முதலமைச்சர் குடும்ப சுற்றுலா மேற்கொண்டிருக்கிறார் என எதிர்க்கட்சி தலைவர் குற்றஞ்சாட்டியிருக்கிறார். முதலமைச்சரின் இந்த பயணம் என்பது முதலீடுகளை ஈர்ப்பது மட்டுமல்ல. அயலகத்தில் அதாவது கடைக்கோடி தமிழ்நாட்டில் இருந்து இங்கு வந்து வசிக்கக்கூடியவர்கள் மற்றும் ஒவ்வொரு தமிழ் குடும்பத்தின் வளத்திற்காகவும் மற்றும் வாழ்விற்காகவும் வருகை தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
3 நாட்களில் ரூ.6 ஆயிரம் கோடி முதலீடு
முதலமைச்சர் உலக வர்த்தக பொருட்காட்சியில் முடிவுறும் தருவாயில் துபாய்க்கு சென்றுள்ளார் என மற்றொரு குற்றச்சாட்டை எதிர்க்கட்சி தலைவர் முன்வைத்துள்ளார். இந்த பொருட்காட்சி கரோனா பெருந்தொற்றால் தள்ளிப்போடப்பட்டது. மேலும், பொருட்காட்சி தொடங்கும் போது இருந்த தொழில் முதலீட்டாளர்களின் பங்கேற்பை விட, முடியும் தருவாயில் இருந்த வரவேற்பு நன்றாக உள்ளது. கடந்த ஒரு வாரத்தில்தான் உலகின் பல நாடுகளில் இருந்து முதலீடு செய்பவர்கள் வருகை தந்துள்ளார்கள்.
எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தபொழுது எத்தனை ஆயிரம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளார்?. முதலமைச்சர் ஸ்டாலின் மூன்று நாட்களில் வெற்றிகரமாக 6,100 கோடி ரூபாய் முதலீட்டை தமிழ்நாட்டிற்கு ஈர்த்துள்ளார்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பி.கே மூக்கையா தேவர் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக நடத்த ஒ.பி.எஸ் கோரிக்கை!