நாட்டிலேயே முதன்முறையாக சென்னை விமானநிலையத்தில் மல்டிபிளெக்ஸ் தியேட்டர் திறப்பு சென்னை:விமான நிலையத்தில் பயணிகளின் பொழுதுபோக்கிற்காக 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வணிக வளாகங்கள், 5 திரையரங்குகள், ஓட்டல்கள், கடைகள், கார் பார்க்கிங் ஆகியவை கட்டப்பட்டு அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்டன. இதில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2100 கார்கள் நிறுத்தக் கூடிய கார் பார்க்கிங் கட்டடம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தில் முன்கூட்டியே விமானத்திற்காக வந்து காத்திருக்கும் பயணிகள், விமானத்தில் சென்னை வந்து மாற்று விமானத்திற்கு அதிக நேரம் காத்திருக்கும் பயணிகள் பொழுது போக்கிற்காக 5 திரைகள் கொண்ட PVR திரையரங்கம் இன்று பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.
இதனை நடிகர் சதீஷ், ஆனந்த்ராஜ், கூல் சுரேஷ், இயக்குநர் வெங்கி, தயாரிப்பாளர் விஜய்பாண்டி ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர். மேலும் நடன நிகழ்ச்சிகள் மற்றும் புதிய திரையரங்கில் படங்கள் திரையிடப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டன. சென்னை விமான நிலையத்திலிருந்து பயணிப்பவர்கள் புதிதாக கட்டப்பட்ட இணைப்புப் பாலம் வழியாக திரையரங்கை அடையலாம். 5 திரைகள் கொண்ட இந்த திரையரங்கங்களில் 1000 பேர் ஒரே நேரத்தில் படம் பார்க்கலாம்.
மேலும் கூடிய விரைவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள உணவு விடுதிகள், சில்லறை கடைகள் உள்ளிட்டவை திறக்கப்பட உள்ளன. இதனால் விமான நிலையத்தில் அதிக நேரம் காத்திருக்கும் பயணிகளுக்கு பொழுதுபோக்கிற்கு பஞ்சம் இருக்காது என அதிகாரிகள் கூறுகின்றனர். இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னை விமானநிலையத்தில் பயணிகள் பொழுதுபோக்கிற்காக திரையரங்கம் திறக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் நிகழ்வில் பேசிய திரைப்பட நடிகர் சதீஷ், "சேலத்தில் இருந்து சென்னை வந்து சினிமா வாய்ப்பு தேடிக் கொண்டிருந்தபோது படம் பார்ப்பதற்கு சத்யம் தியேட்டருக்கு சென்று 10 ரூபாய் டிக்கெட் எடுக்க காத்திருப்பேன். முதல் நாள் டிக்கெட் கிடைக்காது, நான்கு நாட்கள் படையெடுத்து 10 ரூபாய் டிக்கெட் வாங்கிக் கொண்டு கில்லி, தூள், அந்நியன் ஆகிய படங்களை பார்த்து இருந்த ஒருத்தனுக்கு இன்று திரையரங்கு துவக்க விழாவிற்கு வரும் வாய்ப்பு கிடைத்ததற்கு கடவுள், மக்கள், உங்களுக்கும் நன்றி’ தெரிவிப்பதாக கூறினார்.
அழகு, திறமை இல்லையென்றாலும் கூட கடுமையாக முயற்சி செய்தால் வரலாம் என்பதற்கு நான் கூட ஒரு சின்ன உதாரணம். 10 ரூபாய் டிக்கெட் வாங்கி படம் பார்ப்பவர்கள் அடிக்கும் கமெண்ட்கள் ரசிக்கும் வகையில் இருக்கும். திறப்பு விழாவிற்கு எங்களை அழைத்ததற்கு எங்கள் குழுவிற்கு பெருமையாக இருக்கிறது" எனக் கூறினார்.
இதையும் படிங்க: "அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது": ஈரோடு கிழக்கு வேட்பாளர் தென்னரசு