அஞ்சல் துறையில் இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மட்டுமே தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பை எதிர்த்து சட்டப்பேரவையில் திமுக குரலெழுப்பியது. இதற்கு அரசுத் தரப்பில் சரியான பதில் கிடைக்காத காரணத்தால் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி வெளிநடப்புச் செய்தது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் அபூபக்கர், "மத்திய அரசு இந்தியைத் தொடர்ந்து அனைத்துத் துறைகளிலும் திணித்துவருகிறது. அண்மையில் ரயில்வே துறையில் இந்தி தெரிந்தவர்கள் மட்டும்தான் பணியில் இருக்க வேண்டும் என்ற சுற்றறிக்கையும் வெளியானது.
அதேபோல் கடந்த ரயில்வே தேர்வில் ஒரு தமிழர் கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை. தற்போது அஞ்சல் துறை தேர்வு தமிழில் நடத்தப்படாது என்று சுற்றறிக்கை வெளியாகியுள்ளது. இதனைக் கண்டித்து சட்டப்பேரவையில் திமுக குரல் எழுப்பியது. இதனை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். ஆனால் வெளிநடப்பு செய்யக் காரணம் தேடிவருவதாக முதலமைச்சர், துணை முதலமைச்சர் எங்களைக் கொச்சைப்படுத்திவிட்டனர்.
இந்தித் திணிப்பை நாங்களும் எதிர்க்கிறோம் என்று கூறுகின்றனர். ஆனால் தீர்மானத்தை நிறைவேற்ற மறுக்கின்றனர். இதன்மூலம் இந்தித் திணிப்பை நேரடியாக எதிர்த்து மறைமுகமாக மத்திய அரசை ஆதரிக்கின்றனரோ என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது. சட்டப்பேரவை 20ஆம் தேதி வரைதான் நடைபெறும்.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வெளிநடப்பு அதற்குப் பின் சட்டப்பேரவை கூட வாய்ப்பில்லை. எனவே தமிழ் மொழியை வலியுறுத்தும் கருத்தை மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று கூறினோம். எங்கள் கருத்தைக் கொச்சைப்படுத்தியதால் திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் வெளிநடப்புச் செய்கிறோம்" என்று கூறினார்.