சென்னை:மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிப்பது பள்ளி பொதுத்தேர்வு தான். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் தான்11-ஆம் வகுப்பில் பாடப்பிரிவுகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. பொறியியல், சட்டம், மீன்வளம் சார்ந்த பட்டப் படிப்புகள், வேளாண்துறை சார்ந்த பட்டப் படிப்புகள் என்று பல வகையான உயர்கல்விக்கு, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் எடுக்கும் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. இளங்கலை மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கு மட்டுமே நீட் தேர்வு மதிப்பெண் மூலம் நடத்தப்படுகிறது.
இதனால், 12-ம் வகுப்பு பொது தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டியது முக்கியமானதாக இருக்கிறது.
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் தோராயமாக 8 லட்சம் மாணவர்கள் 12-ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதும் நிலையில், கடந்த சில ஆண்டுகளாக மாற்றுத்திறனாளி மாணவர்கள் எண்ணிக்கை மட்டும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு ஏற்படும் மாற்றுத் திறனை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மருத்துவத்துறை கூறி வருகிறது.
ஆனால், பொதுத் தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதற்கான காரணங்களை கல்வித்துறை அதிகாரிகள் கூறும்போது, கற்றலில் குறைபாடு உள்ள மாணவர்கள் என்றால், அவர்களுக்கு தேர்வில் ஒரு மணி நேரம் கூடுதலாக சலுகை வழங்கப்படுகிறது. மத்திய அரசு உத்தரவின்படி 16 வகையான உடல்நல குறைபாடுகளுக்கு பலவகையான சலுகைகளை அரசுத் தேர்வுத்துறை அளிக்கிறது.
பார்வையற்ற மாணவர்களாக இருந்தால், கூடுதலாக ஒரு மணி நேரம் மற்றும் மாணவர்களின் விடைகளை எழுதுவதற்கு தனியாக ஒரு ஆசிரியர் நியமனம் செய்யப்படுகிறது. மேலும், சம்பந்தப்பட்ட பாடத்தேர்வின்போது, அந்த பாட ஆசிரியர்களே நியமனம் செய்யலாம் என்ற சலுகை அளிக்கப்படுகிறது.
காது கேட்காத பேச முடியாத மாணவர்கள் என்றால், மொழிப் பாடத்தில் இருந்து விலக்குடன், ஒரு மணி நேரம் கூடுதலாக தேர்வு எழுத அனுமதி வழங்கப்படுகிறது. விபத்தில் கை கால் முறிவுகள் ஏற்பட்டால், அந்த மாணவர்களுக்காக அவர்கள் சொல்வதை எழுதும் வகையில், விடைகளை எழுத பாட ஆசிரியர் ஒருவர் நியமனம் செய்வதோடு, கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்கப்படுகிறது. மேலும், மனநல குறைபாடுகள் என்றால் மொழிபாட தேர்வில் இருந்து விலக்கும், கூடுதலாக ஒரு மணி நேரம் மற்றும் விடைகளை எழுதுவதற்கு பாட ஆசிரியர் நியமிக்கப்படுகிறார். இதுபோன்று பல வகையான சலுகைகள் அளிக்கப்படுகின்றன.
இதில் மனநல குறைபாடு, கற்றலில் குறைபாடு, கைகளால் எழுத முடியாத அளவிற்கு பாதிப்பு போன்ற பிரிவுகளின் கீழ் முறைகேடுகள் அதிக அளவில் நடக்கின்றன என கல்வித்துறையில் இருந்து ஓய்வு பெற்ற அதிகாரிகள் கூறுகின்றனர். உடலில் 40 விழுக்காடு அளவிற்கு ஊனம் இருந்தால் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளி என்று சான்றிதழ் வழங்குகிறது. மாணவர்களை பொறுத்த அளவில் அந்தந்த மாவட்டத்தில் இருக்கக்கூடிய அரசு மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் சான்றுகளை அளிக்கின்றனர். ஆனால், கடைசி நேரத்தில் , தேர்வு நெருக்கத்தின்போது அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களே நேரடியாக மாற்றுத்திறனாளி என்று குறிப்பிட்டு மாணவர்களுக்கு சான்றுகளை அளிக்கலாம் என தேர்வுத்துறை தெரிவித்திருக்கிறது. இதனை பயன்படுத்தியும் பல முறைகேடுகள் நடப்பதாக கூறப்படுகிறது.