சென்னையை சேர்ந்த ரவுடி கடல் ஜோதியிடம் காவலர்கள் பேசும் ஆடியோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையானது. இதனையடுத்து காவல்துறை உயர் அலுவலர்கள் உடனடியாக இது குறித்து துறை ரீதியான விசாரணை மேற்கொண்டனர்.
ரவுடி கடல் ஜோதிக்கு விலை போன கிண்டி தலைமை காவலர் ஏகாம்பரம் மற்றும் காவலர் திருமால் ஆகியோரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து காவல் இணை ஆணையர் உத்தரவிட்டார். மேலும் இந்த ஆடீயோவை வெளியிட்ட உதவி ஆய்வாளர் அருண் என்பவரும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
தொடர்ந்து ரவுடிகளுடன் தொடர்பில் இருப்போர், கட்டப்பஞ்சாயத்து, லஞ்சம் வாங்கும் காவலர்களை கண்காணித்து அறிக்கை அனுப்பும்படி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது.
இதனையடுத்து நுண்ணறிவு காவல்துறையினர் ரகசியமாக கண்காணித்து அளித்த அறிக்கை மூலம் கே.கே.நகர் காவல் நிலைய குற்றப்பிரிவைச் சேர்ந்த தனிப்படை காவலர் கருப்பையா மற்றும் சைதாப்பேட்டை உளவுப்பிரிவு காவலர் வேல்முருகன் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்.
இந்நிலையில் சென்னை தியாகராய நகர் காவல் மாவட்டத்தில் வடபழனி, கே.கே.நகர், எம்.ஜி.ஆர் நகர் ஆகிய காவல் நிலையங்களில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் கருப்பையா என்பவர் தலைமை காவலராக பணியாற்றி வந்துள்ளார்.
இவர் நியாயம் கேட்டு காவல் நிலையத்துக்கு வரும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், எதிர் மனுதாரருடன் சேர்ந்து கட்டப்பஞ்சாயத்து செய்து வந்ததால், கடந்த 2020 ஆம் ஆண்டு எண்ணூர் காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனால் எண்ணூர் காவல் நிலையத்தில் ஆறு மாதம் பணியில் இருந்தார்.
பின்னர் மீண்டும் தனது அரசியல் தொடர்பை வைத்து, அதே கே.கே.நகர் காவல் நிலையத்தில் பணியிடம் பெற்று வந்துள்ளார். இதனையடுத்து சோழவரம் காவல் நிலையத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்ட இருசக்கர வாகனம் ஒன்று, கே.கே நகர் பகுதியில் காவலர் கருப்பையாவிடம் சிக்கியுள்ளது.
அப்போது திருடனிடம் இருந்து பைக்கை பறித்த கருப்பையா, உயர் அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்காமல் இரண்டு வருடங்களாக சொந்த பயன்பாட்டிற்காக பயன்படுத்தி வந்துள்ளார். இது தொடர்பாக நுண்ணறிவு பிரிவு அலுவலர்களுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருக்கு நண்பர் என கூறிக் கொண்டு, சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வரும் சரித்திர பதிவேடு குற்றவாளியான கமல்தாஸ் என்பவருக்கு உடந்தையாகவும் காவலர் கருப்பையா செயல்பட்டு வந்துள்ளார். இது குறித்து தற்போது உயர் அலுவலர்களுக்கு தெரிய வந்துள்ளது.
இதனால் காவலர் கருப்பையா காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட காவலர் கருப்பையா, மீண்டும் அதே காவல் நிலையத்திற்கு வருவதாக சவால் விடுத்து சென்றுள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க:உனக்கு வெளிநாட்டில் தான் வேலை வேண்டுமா? - இளைஞரை வசைபாடிய பெண் காவலர்