சென்னை:அண்ணா சாலையில் செயல்பட்டு வரும் யூனிடாப் கெமிக்கல் கம்பெனி தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
யூனிடாப் நிறுவனம் மகாராஷ்டிரா மாநிலத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. மேலும், பல்வேறு மாநிலங்களில் இதன் கிளை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் சக்தி டவர் என்ற தனியார் வணிக வளாகத்தில் யூனிடாப் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்திலும், இதற்கு வர்த்தக ரீதியாகத் தொடர்புடைய நிறுவனங்களிலும் உள்ள நிர்வாகிகளின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக அண்ணா சாலை பகுதியில் உள்ள மற்றொரு ரசாயன நிறுவனத்தில் வருமானவரித் துறை சோதனை நடத்தியது.
இதையும் படிங்க: ஒரே மாதிரி கல்வி நிறுவனத்தின் பெயரை வைப்பதற்கு அகில இந்திய தொழில்நுட்பக் கழகம் கிடுக்குபிடி!
அந்த சோதனையின் அடிப்படையில் தான் தற்போது சோதனை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுவதாகவும், இதில் அரசியல் பின்புலம் எதுவும் இல்லை எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது குறித்த முழு விபரங்கள் அடுத்தடுத்து வெளியாகும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ரசாயன நிறுவனத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில் இன்று காலை முதல் பொதுப்பணித்துறைக்கு மின்சாதன பொருட்களை சப்ளை செய்யும் அமித் என்பவர் வீட்டிலும் அவருக்குத் தொடர்புடைய சில பகுதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகளும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறை அதிகாரிகளும், அமலாக்கத்துறை அதிகாரிகளும் சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: மது பாட்டிலுக்குள் மட்டையான பல்லி? குமட்டிக் கொண்டு ஓடிய குடிகாரர்.. வைரல் வீடியோ!