தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுக எம்பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் ஐடி ரெய்டு; ரூ.32 கோடி ரொக்கம் உள்பட பல கோடி மதிப்பிலான ஆவணங்கள் சிக்கின! - today latest news

Jagatrakshagan IT Raid: திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில், ஜெகத்ரட்சகனின் அறக்கட்டளையில் இருந்து கணக்கில் காட்டப்படாத ரூ.300 கோடி பல்வேறு தனிப்பட்ட கணக்குகளுக்கு மாற்றம் செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

Jagatrakshagan IT Raid
ஜெகத்ரட்சகன் எம்.பி தொடர்புடைய இடங்களில் ரூ.32 கோடி ரொக்கம், ரூ.28 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்..!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 19, 2023, 7:58 AM IST

சென்னை: திமுக நாடாளுமன்ற உறுப்பினரான ஜெகத்ரட்சகன், தனது கல்வி நிலையங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் மூலம் ஈட்டிய வருவாயை முறையாக கணக்கு காட்டாமல், வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி முதல் சென்னை, காஞ்சிபுரம், புதுச்சேரி, திருவள்ளூர், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் ஜெகத்ரட்சகனுக்குச் சொந்தமான 40க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர்.

இதனை அடுத்து, அக்டோபர் 10ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த சோதனையில் பணம், நகைகள் மற்றும் முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். தற்போது இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் 25 கோடி ரூபாய் முறைகேடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சவிதா கல்வி குழுமத்திற்குச் சொந்தமான கல்வி நிலையங்களில் இருந்து ரூ.400 கோடி மதிப்பிலான கணக்கில் வராத கட்டண ரசீதுகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும், இதேபோல் மேலும் தவறான தகவல்கள் அளித்து 25 கோடி ரூபாய் போலியாக கட்டணச் சலுகை வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தவிர, பல்வேறு முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது மட்டுமல்லாது, கல்வி நிறுவனங்களில் பயில மாணவர்களை ஈர்ப்பதற்காக ஏஜென்டுகள் பயன்படுத்தப்பட்டதும், இதற்காக கணக்கில் காட்டப்படாத கமிஷன் தொகை சுமார் ரூ.25 கோடி வசூல் செய்யப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக மதுபான வணிகத்தில் போலி வரவு செலவு கணக்கு காண்பித்து, அதன் மூலம் ரூ.500 கோடி முறைகேடு செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

மேலும், ஜெகத்ரட்சகனின் அறக்கட்டளையின் வங்கிக் கணக்கில் இருந்து கணக்கில் காட்டப்படாத 300 கோடி ரூபாய், பல்வேறு தொழில்களின் தனிப்பட்ட கணக்குகளுக்கு மாற்றம் செய்யப்பட்டதற்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், ஆந்திராவில் உள்ள ஒரு தொழில் நிறுவனத்தைக் கையகப்படுத்துவதற்காகச் செலுத்தப்பட்ட பணமும் இதில் அடங்கும் என்றும், இதுவரை நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.32 கோடி ரொக்கம் மற்றும் ரூ.28 கோடி மதிப்புள்ள தங்கம் முதலியவை கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:அஜித்தை வைத்து படம் இயக்குவது என்னுடைய மிகப்பெரிய ஆசை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ்!

ABOUT THE AUTHOR

...view details