சென்னை:கோயம்புத்தூர், சென்னை, கரூர் உள்ளிட்ட இடங்களில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக சோதனை செய்து வருகின்றனர்.
கோவை கோல்ட் விண்ட்ஸ் பகுதியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர் செந்தில் கார்த்திகேயன் இல்லம், ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள செந்தில் பாலாஜியின் நண்பர் அரவிந்தன் இல்லம், தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள அரவிந்தனின் மனைவி காயத்ரி இல்லம், சவுரிபாளையத்தில் உள்ள அவத்களின் அலுவலகம் ஆகிய இடங்களில் மூன்றாவது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
அதேபோல் சென்னை அபிராமிபுரம் பகுதியில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான ஒருவர் இல்லத்திலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
மூன்று நாட்களாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான இல்லங்கள் மற்றும் அலுவலங்களில் நடைபெற்று வரும் வருமான வரி சோதனையில் கணக்கில் காட்டப்படாத வருமானம் தொடர்பாக முக்கிய ஆவணங்கள், பென்டிரைவ் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும், அதேபொல் கணக்கில் காட்டப்படாத 3.5 கோடி ரூபாய் ரொக்கமும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், வருமான வரித்துறை அதிகாரிகள், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான 40 இடங்களில் சோதனை நடத்திய நிலையில் ஒரு சில இடங்களில் மூன்றாவது நாளாக தற்போது சோதனை நடைபெற்று வருகிறது. நாளையும் சோதனையானது தொடர்ந்து நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. சோதனை முழுவதுமாக முடிந்த பின்பு முழுமையான தகவல் வெளியாகும் எனவும் வருமான வரித்துறை அதிகாரி தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:Rahul Gandhi : ராகுல் காந்தி திடீர் அமெரிக்கா பயணம்... கசிந்தது ரகசியம்!