சென்னை:கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு உதிரி பாகம் தயாரிக்கும் சாரதா மோட்டார்ஸ் குழுமத்திற்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை (மே 19) முதல் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சாரதா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமையிடம் டெல்லியில் உள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை ஆகிய மாவட்டங்களில் இந்நிறுவனத்தின் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
செங்கல்பட்டு மாவட்டம், மகேந்திரா சிட்டி வளாகத்தில் உள்ள சாரதா மோட்டார் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தொழிற்சாலையில் கார் உதிரி பாகங்கள் தயாரிக்கப்படுகின்றன. அப்படி தயாரிக்கப்படும் கார்களுக்கான உதரி பாகங்களை அசோக் லேலண்ட் மற்றும் ஹூண்டாய் போன்ற நிறுவனங்களுக்கு, விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்நிறுவனம் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வந்த தகவலின் அடிப்படையில் இன்று அதிகாலை 4 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சாரதா குழுமத்திற்குச் சொந்தமான நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் வீடுகளில் சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம், இருங்காட்டுகோட்டை, செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி உட்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் செயல்பட்டு வரும் சாரதா மோட்டார்ஸ் நிறுவனத்தில், வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க:ஓட்டுநரின் தூக்க கலக்கத்தால் கார் விபத்து: ராணிப்பேட்டையில் இரு சிறுமிகள் பலி!