சென்னை:வருமான வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக தமிழகத்தின் 40 இடங்களில் இன்று (செப். 20) காலை முதலே வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
வருமான வரி ஏய்ப்பு செய்ததாக கிடைத்த புகாரின் அடிப்படையில் 4 தனியார் நிறுவனங்களுக்குச் செந்தமான பல்வேறு இடங்களில் சேதனையானது நடைபெற்று வருகிறது. சென்னையில் நாவலூர், துரைப்பாக்கம், செங்குன்றம், மணலி, அண்ணா நகர், பள்ளிக்கரணை, நீலாங்கரை, எண்ணூர் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு பொருட்கள் சப்ளை செய்யும் முகவர்கள் மற்றும் அதில் இடைத்தரகர்களாக பணியாற்றிய நபர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு சில நிறுவனங்களில் இருந்து கேபிள் வயர், கன்வேயர் பெல்ட் போன்ற பொருட்கள் கொள்முதல் செய்யப்படுகிறது.
அப்படி கொள்முதல் செய்யப்பட பொருட்களில் முறைகேடு உள்ளதாக ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் சில புலனாய்வு அமைப்புகளுக்கு புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு சப்ளை செய்யப்பட பொருட்களின் மதிப்பை விட அதிகமாக வாங்கியதாகவும், ஆனால் கணக்கில் அதன் விலை குறைத்துக் காட்டி வரியைப்பு செய்துள்ளதாகவும் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன.