சென்னை:நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களுக்கான வருமான வரித்துறை தலைமை ஆணையர் ரவிச்சந்திரன் ராமசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தமிழகம், புதுச்சேரியில் 2022-23-ம் நிதியாண்டில் ஒரு லட்சத்து 8 ஆயிரம் கோடி ரூபாய் வருமான வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. கடந்த நிதி ஆண்டை விட 2022-23ம் நிதி ஆண்டில் வரி வசூல் ரூ.3,000 கோடி அதிகமாக உள்ளது.
தமிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சி நன்றாக உள்ளது. இந்திய அளவில் 18 விழுக்காடு வளர்ச்சியும் தமிழகம், புதுச்சேரியில் 20 விழுக்காடும் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் வரி செலுத்துவோர் எண்ணிக்கை 10 விழுக்காடு அதிகரித்துள்ளது.
2023-24ம் நிதி ஆண்டில் இதை 20 சதவீதமாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2022-23ம் நிதி ஆண்டில் வரி ஏய்ப்பு செய்தவர்கள் 7 பேர் சட்டப்படி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதுவரை ஒரு ஆண்டில் 7 நபர்கள் வரி ஏய்ப்பு காரணமாக சிறையில் அடைக்கப்பட்டது கிடையாது. இதுவே முதல் முறையாகும்.