இது தொடர்பாக மாற்றத்திற்கான ஊடகவியலளார்கள் மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், " கரோனா பெருந்தொற்று காலத்தில் மக்களுக்கு செய்திகளை சென்று சேர்க்கும் அரும்பணியில் பல பத்திரிகையாளர் உயிரிழந்துள்ளனர். ஆகவே, பத்திரிகையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், முன்களப் பணியாளர்கள் என்ற அடிப்படையில், உயிரிழந்த பத்திரிகையாளர்கள் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம்.
இந்நிலையில், பத்திரிகையாளர்களுக்கு ஊக்கத் தொகையாக ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும், கரோனாவால் உயிரிழந்த பத்திரிகையாளர்களுக்கு, முந்தைய அரசு வழங்கி வந்த ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகை 10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
அரசால் அங்கீகரிக்கப்பட்டவர்களுக்கே ஊக்கத் தொகை
இந்த ஊக்கத் தொகையும் இழப்பீட்டுத் தொகையும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஆகவே, அரசு அறிவித்துள்ள இந்த ஊக்கத் தொகையையும், இழப்பீட்டுத் தொகையையும் ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் பத்திரிகையாளர்களில் ஐந்து சதவீதத்தினருக்கு கூட பயனளிக்காது.
சென்னையைப் பொறுத்தவரை, தொலைகாட்சி, செய்தித்தாள் நிறுவனங்கள் ஒவ்வொன்றிற்கும் 10 அரசு அங்கீகார அட்டை மட்டுமே வழங்கப்படுகிறது. அந்த நிறுவனத்தில் அதிக எண்ணிக்கையிலான நபர்கள் வேலை செய்தாலும் , 10 பேருக்கு மட்டுமே அரசு அங்கீகார அட்டை வழங்கப்படுகிறது. அந்த 10 பேரை அந்த நிறுவனம் தேர்ந்தெடுத்து அரசுக்கு அனுப்ப வேண்டும்.
உயர் மட்டத்தில் பணியாற்றுபவர்களுக்கு 5 அட்டை
பொதுவான அனைத்து நிறுவனங்களிலும், ஆசிரியர், உதவி ஆசிரியர், தலைமை செய்தியாளர் என உயர் மட்டத்தில் பணியாற்றுபவர்கள் சுமார் ஐந்து அங்கீகார அட்டையை வைத்துக் கொள்வார்கள். வெளியில் சென்று செய்தி சேகரிக்கும் செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், புகைப்படக் கலைஞர்களுக்கு மீதமுள்ள ஐந்து அட்டை பகிர்ந்து அளிக்கப்படும். அதிலும், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்களில் ஒருவர் அல்லது இரண்டு பேருக்கு மட்டுமே அரசு அங்கீகார அட்டை கிடைக்க வாய்ப்புள்ளது.
அதேபோல், மற்ற மாவட்டங்களில், ஒவ்வொரு நிறுவனத்திற்கும் அதிகபட்சமாக மூன்று பேருக்கு மட்டுமே அரசு அங்கீகார அட்டை வழங்கப்படுகிறது. ஆனால், மாவட்டங்களில் உள்ள தாலுக்காக்களில் பணியாற்றும் செய்தியாளர்களுக்கு அரசு அங்கீகாரம் கிடைப்பதில்லை.
இதற்கிடையில், ஒவ்வொரு பத்திரிகை நிறுவனத்திலும், துணை ஆசிரியர்கள், செய்தி வாசிப்பாளர்கள், படத் தொகுப்பாளர்கள், வரை கலைஞர்கள், செய்தித் தயாரிப்பாளர்கள் எனப் பலரும் செய்தியை உருவாக்க அலுவலகத்தில் பணியாற்றுகிறார்கள். பொதுவாக எந்த நிறுவனமும் இவர்களுக்கு அரசு அங்கீகார அட்டையை பெற்றுத் தருவதில்லை.
95 சதவீத பத்திரிகையாளர்களுக்குப் பயன் இல்லை
ஆகவே, ஒட்டுமொத்தமாக எடுத்துக்கொண்டால், ஒரு பத்திரிகை நிறுவனத்தில் பணியாற்றும் பத்திரிகையாளர்களில் ஐந்து சதவீதத்தினருக்குக் கூட, அரசு அங்கீகார அட்டை வழங்கப்படுவதில்லை. அப்படி பார்க்கப்போனால், தற்போது அரசு அறிவித்துள்ள ஊக்கத்தொகை மற்றும் இழப்பீட்டுத் தொகை அறிவிப்பால், 95 விழுக்காடு பத்திரிகையாளர்கள் பயனடைய முடியாது.
ஆகவே, தற்போது அரசு பத்திரிகையாளர்களுக்கு அறிவித்துள்ள பலன்கள், எந்தவித நிபந்தனையுமின்றி, அதாவது அரசு அங்கீகாரம் பெற்றவர்களுக்குத்தான் என்றில்லாமல், அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் கிடைக்கும் வகையில் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகிறது.
அதேபோல், டிஜிட்டல் ஊடகங்கள் தற்போது மிகப்பெரிய வளர்ச்சியடைந்துள்ள நிலையில், அந்த நிறுவனங்களில் பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கும் அரசின் பலன் கிடைக்கும் வகையில், அவர்களுக்கும் இது பொருந்தும் என்று அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும் என அந்த மையம் வலியுறுத்தியுள்ளது.
பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்துள்ள அரசு, பிற முன்களப் பணியாளர்கள் உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்தினருக்கும் 25 லட்சம் ரூபாய் வழங்குவதுபோல், பத்திரிகையாளர் குடும்பங்களுக்கும் அந்தத் தொகையை வழங்க வேண்டும் என்றும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகிறது" என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பிஎஸ்பிபி பள்ளி முதல்வரிடம் இரண்டாவது முறையாக இன்று விசாரணை!