தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிகரித்து வரும் கரோனா: தமிழகத்தில் ஒரே நாளில் 40 பேருக்கு கரோனா பாதிப்பு.. ஒருவர் உயிரிழப்பு..! - கரோனா பாதிப்பு

corona daily cases in Tamilnadu: தமிழ்நாட்டில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இன்று ஒரு நாளில் 40 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது

தமிழகத்தில் ஒரே நாளில் 40 பேருக்கு கரோனா பாதிப்பு
தமிழகத்தில் ஒரே நாளில் 40 பேருக்கு கரோனா பாதிப்பு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 29, 2023, 10:48 PM IST


சென்னை:தமிழ்நாட்டில் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் தற்போது 172 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று புதிதாக 40 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், சென்னையில் ஒருவர் கரோனா தொற்று பாதிப்பினால் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார் என பொதுச் சுகாதாரத் துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

தொற்று குறித்து பொதுச் சுகாதாரத் துறை இயக்குநரகம் வெளியிட்ட அறிக்கையில், “கரோனா உருமாற்றம் அடைந்து பரவி வருகிறது. தமிழ்நாட்டில் ஒற்றை இலக்கத்திலிருந்த பாதிப்பு தற்பொழுது இரட்டை இலக்கத்திற்கு மாறி வருகிறது. கரோனா வைரஸ் பாதிப்பின் போது, தொண்டை வலி, அதிக காய்ச்சல், சளி, இருமல், உடல் வலி போன்ற அறிகுறிகள் இருக்கும். அவ்வாறு, இருந்தால் அவர்கள் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். மேலும் சளி, இருமல் இருப்பவர்கள் மற்றவர்களுக்கு நோய்த் தொற்று வரக்கூடாது என்பதற்காக தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வதுடன், முககவசம் அணிந்து செல்வதும் நல்லது” என தெரிவித்துள்ளது.

மேலும், கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் பரிசோதனைகளைத் தீவிரப் படுத்த வேண்டும் எனவும், லேசான அறிகுறி உள்ளவர்களுக்கும் இணை நோய் இருந்தால் கட்டாயம் பரிசோதனை செய்ய வேண்டும் என பொதுச் சுகாதாரத் துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாடு பொதுச் சுகாதாரத்துறை இயக்குநரகம் இன்று (டிச.29) வெளியிட்ட கரோனா பாதிப்புகள் குறித்த விபரங்களில், தமிழ்நாட்டில் கரோனா புதியதாகப் பரிசோதனைகள் 518 பேருக்கு மேற்கொள்ளப்பட்டது. அதன் மூலம் 40 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. மேலும், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 172 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் இது வரையில், 7 கோடியே 10 லட்சத்து 1 ஆயிரத்து‌ 829 பேர் பாதிக்கப்பட்டனர் எனவும், கரோனா பாதிக்கப்பட்ட 36 வயது ஆண் ஒருவர் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

சென்னை மாவட்டத்தில், ஒரே நாளில் 25 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 6 பேருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 4 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 2 பேருக்கும், கோயம்புத்தூர், நாமக்கல், சேலம் மாவட்டத்தில் தலா ஒருவர் என 40 பேருக்குப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும் சென்னை மாவட்டத்தில் பரிசோதனை செய்பவர்களில் 15.7 சதவீதம் பேருக்கு நோய் தொற்று பரவல் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:"கேப்டன் செய்த புண்ணியம் ஆயிரம் தலைமுறைக்கு நிலைத்து நிற்கும்" - நடிகர் சூப்பர்குட் சுப்பிரமணி

ABOUT THE AUTHOR

...view details