சென்னை: சீனாவின் உகான் மாநகரில் கண்டறியப்பட்ட கரோனா நோய்த் தொற்று கடந்த 2019 மற்றும் 2020 ஆகிய இரண்டாண்டுகள் உலகையே அச்சுறுத்தியது. தனி மனித இடைவெளி, முக கவசம், லாக் டவுன் என எதற்கும் அசராத கரோனா இறுதியாகத் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்பே ஓரளவுக்குக் கட்டுக்குள் வந்தது. அதன் பின் படிப்படியாகக் குறைந்து, ஒற்றை இலக்கத்தில் பாதிப்பு இருந்து வந்த நிலையில், தற்போது ஒரு நாளில் எண்ணிக்கை இரட்டை இலக்கத்தில் மாறி வருகிறது.
கரோனா வைரஸ் பாதிப்பின் போது, தொண்டை வலி, அதிக காய்ச்சல், சளி, இருமல், உடல் வலி போன்ற அறிகுறிகள் இருக்கும். அவ்வாறு இருந்தால் அவர்கள் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். மேலும் சளி, இருமல் இருப்பவர்கள் மற்றவர்களுக்கு நோய்த் தொற்று வரக்கூடாது என்பதற்காக தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வதுடன், முககவசம் அணிந்து செல்வதும் நல்லது என பொதுச் சுகாதாரத்துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாடு பொதுச் சுகாதாரத்துறை இயக்குநரகம் இன்று (ஜனவரி 01) வெளியிட்டுள்ள கரோனா பாதிப்பு குறித்த விபரங்களில் தமிழ்நாட்டில் கரோனா புதியதாகப் பரிசோதனைகள் 490 பேருக்கு மேற்கொள்ளப்பட்டது. அதில், 15 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 181 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல், இன்று 9 பேர் குணமடைந்த நிலையில் விடு திரும்பி உள்ளனர்.
சென்னை மாவட்டத்தில் மட்டும் ஒரே நாளில் 10 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் 3, கோயம்புத்தூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் என மொத்தம் 15 பேர் இன்று (ஜன.01) கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என பொதுச் சுகாதாரத்துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:"இடைநீக்கம் செய்யப்பட்ட சஞ்சய் சிங்குடன் போச்சுவார்த்தை நடத்த வாய்ப்பில்லை" - மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம்!