சென்னை:தலைமைச்செயலகத்தில் தலைமைச்செயலாளர் இறையன்புவை சந்தித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த இயக்குநரும், தமிழ்ப்பேரரசு கட்சியின் தலைவருமான வ.கௌதமன், 'கீரை வியாபாரிகளுக்கு உரிய இடம் கோயம்பேடு சந்தையில் ஒதுக்கப்படவில்லை. சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இது தொடர்பாக தலைமைச்செயலாளரை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளோம். அவர் சரி செய்து தருவதாக கூறியுள்ளார்' எனத் தெரிவித்தார்.
மேலும் பொன்னியின் செல்வன் படம் குறித்து கருத்து தெரிவித்த அவர், 'தமிழ் நிலத்தை சோழப்பேரரசு மட்டுமே 350 ஆண்டுகளாக ஆண்ட வரலாறு உண்டு. இந்த திரைப்படத்தை தமிழனாக இருந்து சொல்லவில்லை என்றாலும் வரலாற்றைச்சொல்லி இருக்க வேண்டும்.
சோழர்களின் சின்னமான புலிக்கொடியை ஒரு இடத்தில் கூட காட்டவில்லை என்றால், அப்படி என்ன வரலாற்று ஆய்வு செய்துள்ளார்கள்' எனக் கேள்வியெழுப்பிய அவர், 'ஜெயமோகன் சோழர்கள் தெலுங்கர்கள் என குறிப்பிடுகிறார். படைப்பாளிகள் உண்மையைப் பேச வேண்டும், ஆளுமையோடு படைப்பை உருவாக்க வேண்டும்.
இதுபோன்ற வரலாற்றை மடைமாற்றும் செயல்கள் இரண்டாம் பாகத்தில் இடம் பெற்றிருந்தால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும். தமிழர்களை திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம்' என எச்சரித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய கௌதமன், 'ஆதித்த கரிகாலன் பிராமணர்களால் கொல்லப்பட்டான். ஆனால், பாண்டியர்களை குற்றம்சாட்டுவதைப் போன்று சித்தரிப்புகள் பொன்னியின்செல்வனில் உள்ளது. இது வட தமிழ்நாட்டிற்கும் தென் தமிழ்நாட்டிற்கும் இடையே பிரச்னையை ஏற்படுத்தும் நடவடிக்கை' எனவும் சாடினார்.
மேலும்'சைவம், வைணவம் மட்டுமே தமிழர் சமயம், இந்து மதம் என்கிற மதம் வெள்ளையர்கள் வருவதற்கு முன்பு இல்லை. புலிக் கொடியை மறைத்தால் மத்திய அரசு தடுக்கும் என்பதற்காக மறைத்தார்களா. பொன்னியின் செல்வன் படத்தில் வரலாற்றை மடைமாற்றம் செய்துள்ளார்கள். புனைவுகளைத் தாண்டி உண்மைகளை சொல்லியிருக்க வேண்டும்' எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: விஜயதசமி வித்யாரம்பம் நிகழ்வில் பாடகி பி.சுசிலா, ஐஐடி இயக்குநர் காமகோடி பங்கேற்பு