தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தின் தலைவர் வெங்கடேசன் சென்னை:2021ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வருவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வாக்குகள் தான். திமுகவின் தேர்தல் அறிக்கையில் ஆசிரியர்கள், அரசு ஊழியர் நலன் என்ற தலைப்பில் பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. ஆட்சி அமைந்தவுடன் கரோனா தொற்று பாதிப்பு என்ற காரணத்தைக் கூறி வந்தனர்.
ஆனால், தற்போது கரோனா தொற்று ஒற்றை இலக்கத்திற்குக் கீழே பதிவாகி வருவதால், அதன் பாதிப்பு எதுவும் இல்லாமல் உள்ளது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத்தொகுதி உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா மறைவினைத் தொடர்ந்து இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
திமுக ஆட்சி அமைந்த பின்னர் முதல்முறையாக நடைபெறும் இடைத்தேர்தல் என்பதால் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தங்கள் வாக்குகளை யாருக்கு செலுத்துவார்கள் என்ற எதிர்பார்ப்பு பல்வேறு தரப்பினரிடம் எழுந்துள்ளது. மேலும், சமீப காலமாக அரசு உதவி பெறும் பள்ளியின் ஆசிரியர்கள், அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்கள் சம்பளம் பெறுவதிலும் பல்வேறு இழுபறிகள் நிலவி வருகின்றன.
இதுகுறித்து தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தின் தலைவரும் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளருமான வெங்கடேசன் கூறும்போது, ''அரசு உதவி பெறும் கல்லூரி மற்றும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் விவரங்களைப் பதிவு செய்வதால் ஊதியம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பணி ஓரிரு நாட்களில் முடிக்கப்பட்டு சரி செய்யப்படும்.
அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் பெரும்பாலும் இடைத்தேர்தலுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதில்லை. கடந்த பொதுத் தேர்தலின்போது பத்தாண்டு கால அதிமுக ஆட்சியின் மீது இருந்த அதிர்ச்சியின் காரணமாக வாக்களித்தனர். அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் அரசு ஊழியர்களுக்கான முக்கியத் திட்டங்கள் எதுவும் இல்லாமல் இருந்தது.
திமுகவின் தேர்தல் அறிக்கையில் பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து, அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன. ஆனால், ஆட்சிக்கு வந்த பின்னர் திமுக தேர்தல் வாக்குறுதியில் இதுவரை எதையும் நிறைவேற்றவில்லை. மத்திய அரசு வழங்கும் அகவிலைப்படி உயர்வையும் ஒழுங்காக வழங்குவது இல்லை. இது போன்ற காரணிகளை ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மனதில் வைத்து, தங்களின் வாக்குகளை செலுத்த வாய்ப்புள்ளது.
திமுக ஆட்சி அமைந்த பின்னர், ஒப்பந்த அடிப்படையில் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவில் பணி நியமனம் செய்வதற்காக அரசாணை 115 வெளியிடப்பட்டது. அதற்கு கடுமையான எதிர்ப்புக் கிளம்பிய நிலையில் அரசாணையினை அமல்படுத்தாமல் நிறுத்தி வைத்தனர். ஆனால், தற்போது ஒப்பந்த அடிப்படையில் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணிகளில் பணி நியமனம் செய்வதை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக மருத்துவத் துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறையில் அதிகளவில் ஒப்பந்தப் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். தமிழ்நாடு அரசின் தலைமைச்செயலகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்'' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:பேனா நினைவுச் சின்னம் அமைக்க டிடிவி தினகரன் புது யோசனை!