சென்னை: அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் மாளிகையில் புதிதாக பதவிகள் வழங்கப்பட்ட நிர்வாகிகள் முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது சஃபாரி உடையில் மேடையில் ஏற முற்பட்ட ஒருவரை அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் யார் எனக் கேட்டபோது சிறைத்துறை அதிகாரி என தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் அந்த நபரை அங்கு பணியில் இருந்த தேனாம்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர். தேனாம்பேட்டை போலீசார் அவரிடம் சோதனை செய்தபோது தமிழ்நாடு காவல்துறையின் போலியான அடையாள அட்டையை அவர் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சந்தேகமடைந்த போலீசார் அந்த நபரையும், அவருடன் வந்தவரையும் தேனாம்பேட்டை காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த வசந்தகுமார் (42) என்பதும், அவர் பொள்ளாச்சி கிளைச் சிறையில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது.