சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த மார்ச் 20ஆம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 21ஆம் தேதி நிறைவடைந்தது. இந்த கூட்டத்தொடரில் முத்திரைத்தாள் திருத்த சட்ட மசோதா, நில ஒருங்கிணைப்பு மசோதா உள்ளிட்ட பல்வேறு முக்கிய சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அதேபோல் துறைவாரியாக பல்வேறு அறிவிப்புகளும் வெளியிடப்பட்டன.
இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (மே.2) முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இதில், பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள், அதை செயல்படுத்தும் முறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. திட்டங்களை முறையாகவும், விரைவாகவும் செயல்படுத்த வேண்டும் என அமைச்சர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியதாக தெரிகிறது.