தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அனுமதியின்றி தண்ணீரை உறிஞ்சும் கேன் குடிநீர் ஆலைகள் - சென்னையில் அபாய ஒலி எழுப்பும் நிலத்தடி நீர்மட்டம்!

சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் உரிய அனுமதியின்றி செயல்படும் கேன் குடிநீர் உற்பத்தி ஆலைகள், தாமரைப்பாக்கம், கோவிலம்பாக்கம், மாடம்பாக்கம், சிட்லப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீரை உறிஞ்சுவதால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

illegal
நிலத்தடி நீர்

By

Published : Jun 12, 2023, 10:33 PM IST

Updated : Jun 13, 2023, 12:25 PM IST

சென்னை:'கேன் வாட்டர்' எனப்படும் கேன்களில் அடைத்து விற்பனை செய்யப்படும் குடிநீர் தற்போது மக்களின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாததாக மாறி இருக்கிறது. சென்னை போன்ற பெருநகரங்கள் மட்டுமல்லாமல் சிறிய நகரங்கள், கிராமங்கள் வரை தற்போது இந்த கேன் குடிநீர் வழக்கம் சென்றுவிட்டது. இந்த கேன் குடிநீரை உற்பத்தி செய்யும் ஆலைகள் பெரும்பாலும் நிலத்தடி நீரையே எடுத்து, சுத்திகரித்து விற்பனை செய்கின்றன. நூற்றுக்கணக்கான ஆலைகள் இதுபோல நிலத்தடி நீரை உறிஞ்சுவதால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைகிறது. குறிப்பாக சென்னை போன்ற பெருநகரங்களில் இந்த குடிநீர் உற்பத்தி ஆலைகளின் எண்ணிக்கை கொஞ்சம் அதிகமாகவே உள்ளது. உரிய அனுமதி பெற்றும், அனுமதி இல்லாமலும் ஏராளமான ஆலைகள் நிலத்தடி நீரை உறிஞ்சி வருகின்றன. இதில் குறிப்பாக சென்னைப் புறநகர் பகுதிகளில் அனுமதியின்றி ஏராளமானோர் நிலத்தடி நீரை உறிஞ்சி கேன் குடிநீர் உற்பத்தி செய்து வருகின்றனர்.

சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் சுமார் 550 கேன் குடிநீர் உற்பத்தி ஆலைகள் இயங்குவதாக தெரிகிறது. தாமரைப்பாக்கம், வேங்கைவாசல், கோவிலம்பாக்கம், மாடம்பாக்கம், சிட்லப்பாக்கம், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் அனுமதியின்றி ஏராளமான குடிநீர் ஆலைகள் செயல்படுகின்றன. இவர்கள் இரவு நேரங்களில் சென்று போர்வெல் போன்றவற்றின் மூலம் நிலத்தடி நீரை உறிஞ்சுவதாகவும், இது தொடர்ந்து வருவதால் நிலத்தடி நீர்மட்டம் குறையும் என்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இது குறித்து கிரேட்டர் தமிழ்நாடு பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளர் சரவணனிடம் கேட்டபோது, "சென்னை மாநகரம் மட்டுமின்றி, மாநிலம் முழுவதும் கேன் தண்ணீரையே லட்சக்கணக்கான மக்கள் நம்பியுள்ளனர். இது கோடை காலம் என்பதால், சென்னை நகரத்தில் மட்டும் சுமார் 5 லட்சம் தண்ணீர் கேன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. எனினும் நாங்கள் நிர்ணயிக்கப்பட்ட நிலத்தடி நீரை விட அதிகமாக நீரை எடுப்பதில்லை. சென்னை மண்டலத்தில் கடந்த காலங்களில் 700-க்கும் மேற்பட்ட பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் நிலையங்கள் இருந்தன. ஆனால், முறையான விதிகளை பின்பற்றாததால், சுமார் 200 நிலையங்கள் மூடப்பட்டன. சில நேரங்களில் உரிய விதிமுறைகளின்படி செயல்படும் நிலையங்களையும் அதிகாரிகள் வேண்டுமென்றே மூடுகிறார்கள், அச்சுறுத்துகிறார்கள்" என்றார்.

கேன் குடிநீருக்காக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது குறித்து பொதுப்பணித்துறையின் நிலத்தடி நீர் பிரிவு தலைமை பொறியாளர் பிரபாகரன் கூறும்போது, "நிலத்தடி நீரை உரிமம் இல்லாமல் எடுப்பது பெரிய குற்றமாகும். பொதுப்பணித்துறையின் நிலத்தடி நீர் பிரிவு கேன் தண்ணீர் எடுக்கும் நிலையங்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. விதிகளை மீறும் நிலையங்கள் குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தெரிவித்து, உரிமம் ரத்து செய்யப்படுகிறது. சென்னை மண்டலத்தில் குடிநீர் உற்பத்தியாளர்கள் சில விதிமுறைகளை பின்பற்றவில்லை என்றால், நடவடிக்கை எடுத்து வருகிறோம். நிர்ணயிக்கப்பட்ட அளவைத் தாண்டி நிலத்தடி நீரை அதிகமாக சுரண்டக் கூடாது என்று அவ்வப்போது அறிவுறுத்தி வருகிறோம். மேலும், தண்ணீர் உறிஞ்சப்படும் அளவு தண்ணீர் மீட்டர் மூலம் கண்காணிக்கப்படுகிறது" என்றார்.

நிலத்தடி நீரை எடுப்பதற்கு என்ன வழிமுறைகள்?

பொதுப்பணித்துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, நிலத்தடி நீரை எடுக்க விரும்புவோர், மாவட்ட நிர்வாக அதிகாரிகளை அணுகி, தேவையான விண்ணப்பப் படிவங்களை நிரப்ப வேண்டும். படிவங்களை பூர்த்தி செய்த பிறகு, பொதுப்பணித்துறையின் நிலத்தடி நீர் பிரிவு அதிகாரிகளை சந்திக்க வேண்டும். அவர்கள் முறையாக ஆய்வு செய்து, பிறகு அனுமதி வழங்கப்படும். அதைவிட முக்கியமாக, மாவட்ட அளவிலான 'நீர் பயன்பாட்டுக் குழு' மூலம் தண்ணீர் எடுப்பதற்கு ஆபரேட்டர்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். அப்போதுதான் ஆழ்துளை கிணறுகள் மூலம் தண்ணீர் எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Cyclone Biparjoy: குஜராத்தை நெருங்கும் பிப்பர்ஜாய் புயல்.. அலர்ட் நிலையில் அரசு!

Last Updated : Jun 13, 2023, 12:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details