தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘சன்லைட் படாம வளர்க்கனும்..’ என்ஜினியரின் ‘கஞ்சா வளர்ப்பு’ சூட்சமம் - சுற்றி வளைத்த போலீஸ்! - Chennai news

வீட்டிலேயே சூரிய ஒளி படாமல் பிரத்யேகமாக தயார் செய்து கஞ்சா செடி வளர்த்து விற்பனை செய்து வந்த என்ஜினியர் மற்றும் ரயில்வே ஊழியர் உள்பட 4 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

‘சன்லைட் படாம வளர்க்கனும்..’ என்ஜினியரின் ‘கஞ்சா வளர்ப்பு’ சூட்சமம் - சுற்றி வளைத்த போலீஸ்!
‘சன்லைட் படாம வளர்க்கனும்..’ என்ஜினியரின் ‘கஞ்சா வளர்ப்பு’ சூட்சமம் - சுற்றி வளைத்த போலீஸ்!

By

Published : Mar 3, 2023, 4:52 PM IST

வீட்டிலேயே சூரிய ஒளி படாமல் பிரத்யேகமாக தயார் செய்து கஞ்சா செடி வளர்த்து விற்பனை செய்து வந்த என்ஜினியர் மற்றும் ரயில்வே ஊழியர் உள்பட 4 பேர் கைது

சென்னை:சென்னையில் உள்ள ரிசார்டுகள், பப் போன்ற கேளிக்கை விடுதிகளில் விலை உயர்ந்த கஞ்சா மற்றும் போதை ஸ்டாம்புகள் விற்கப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வடக்கு கடற்கரை உதவி ஆணையரின் தனிப்படை காவல் துறையினர், தங்களது கஞ்சா வேட்டையைத் தொடங்கினர். அப்போது கஞ்சா வாங்குபவர்போல நடித்து, கஞ்சா விற்பனை செய்ய வந்த நபரை தனிப்படை காவல் துறையினர் பிடித்தனர்.

இதனையடுத்து பிடிபட்ட நபரிடம் விசாரணை மேற்கொண்டதில் கிடைத்த தகவலின் பேரில், மாடம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பதுங்கி இருந்த சக்திவேல், சியாம் சுந்தர், ஸ்ரீகாந்த் மற்றும் நரேந்திரகுமார் ஆகிய நான்கு பேரையும் தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் இவர்களது வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பதைக் கண்ட காவல் துறையினர், இது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

கஞ்சா வளர்த்தது எப்படி? முக்கிய நபரான சக்திவேல் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர் இணையதளம் பற்றிய நல்ல அறிவு கொண்டவர். வேலையில் சம்பாதித்த பணத்தை சக்திவேல் கிரிப்டோ கரன்சியாக மாற்றி டிரேடிங் தொழில் செய்து வந்துள்ளார். ஆனால், தொழிலில் நஷ்டம் அடைந்ததால், சக்திவேல் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கத் திட்டமிட்டுள்ளார்.

அதுவும் காவல் துறையினரிடம் சிக்காதபடி பல யுக்திகளை கையாண்ட சக்திவேல், கஞ்சா வளர்த்து விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளார். இதற்காக இது குறித்து யூடியூப்பில் பார்த்து கற்றுக் கொண்டுள்ளார். பின்னர் கிரிப்டோ கரன்சி மூலமாக டார்க் வெப்சைட்டில் வெளிநாடுகளில் பயன்படுத்தப்படும் கஞ்சா வளர்க்கக்கூடிய உபகரணங்கள் மற்றும் விதைகளை கூரியர் மூலம் வாங்கியுள்ளார்.

இதனையடுத்து மாடம்பாக்கத்தில் வாடகைக்கு வீடு எடுத்து, வீட்டிலேயே விலை உயர்ந்த கஞ்சா செடி வளர்த்து வந்துள்ளார். குறிப்பாக, பக்கத்து வீட்டாருக்கு சந்தேகம் வராத படியும், நாற்றம் வராமலும் இருப்பதற்காக அதி நவீன உபகரணங்கள் மூலமாக சூரியஒளி படாமல் கஞ்சா செடி வளர்த்து வந்துள்ளார்.

அதிலும் ஆய்வகம்போல அமைத்து கஞ்சாவை பறித்து, அதனை உலர வைத்து விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் இதன் மூலம் 7க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகளை சக்திவேல் வீட்டில் வளர்த்து வந்துள்ளார். அதுமட்டுமின்றி, சக்திவேல் போதை ஸ்டாம்புகளும் வாங்கி விற்பனை செய்து வந்துள்ளார்.

இவ்வாறு தான் வளர்த்த கஞ்சா மற்றும் போதை ஸ்டாம்புகளை ஆன்லைன் மூலமாக விற்பனை செய்வதற்காக ரயில்வே ஊழியர் சியாம் சுந்தர், நரேந்திரகுமார் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோரை சக்திவேல் பயன்படுத்தி உள்ளார். குறிப்பாக ஒரு கிராம் கஞ்சாவை 1,000 ரூபாய் முதல் 1,500 ரூபாய் வரை பள்ளி, கல்லூரி மற்றும் கேளிக்கை விடுதிகளில் விற்பனை செய்து வந்துள்ளார்.

மேலும் கடந்த 4 வருடமாக வீட்டிலேயே கஞ்சா செடி வளர்த்து விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இவர்களிடமிருந்து 10க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகள், 356 போதை ஸ்டாம்புகள் மற்றும் 3 கிலோ கஞ்சாவை தனிப்படை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் சக்திவேலின் வீட்டிற்கு அவரை அழைத்துச் சென்று காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:இஸ்லாமியர்களை குறி வைக்கும் ரூபி ஜுவல்லர்ஸ்.. 300 கிலோ தங்கம் மோசடி... பாதிக்கப்பட்டவர்கள் போராட்டம்...

ABOUT THE AUTHOR

...view details