சென்னை ஐஐடியில் நடைபெற்ற முதற்கட்ட வேலைவாய்ப்பு முகாமில், 170 நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன என ஐஐடி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆலோசகர் பேராசிரியர் சங்கர் ராம் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், ’முதற்கட்ட வேலைவாய்ப்பு முகாமிற்கு 1344 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் டிசம்பர் ஒன்றாம் தேதியிலிருந்து எட்டாம் தேதி வரை நடைபெறுகிறது. இவர்களை தேர்வு செய்வதற்காக 170 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளனர். அவற்றில் சர்வதேச அளவில் 35 பதவிகளுக்கும், இந்திய அளவில் 322 பதவிகளுக்கும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இரண்டாம் கட்ட வேலைவாய்ப்பு முகாம் பிப்ரவரி மாதம் நடைபெறும்.
அதேபோல, சென்னை ஐஐடியில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு தொழிற்சாலையில் பயிற்சியுடன் கூடிய பணி உத்தரவாதங்கள் 158 பேருக்கு வழங்கப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.
ஐஐடி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆலோசகர் செய்தியாளர்ச் சந்திப்பு கடந்தாண்டு நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 1227 மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் 977 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது. சென்னை ஐஐடியில் படிக்கும் அனைத்து மாணவர்களும் வேலைவாய்ப்பிற்கு பதிவு செய்வதில்லை. சில மாணவர்கள் உயர் படிப்பிற்கும், ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகளுக்கான போட்டி தேர்விற்கும் செல்கின்றனர். அதுமட்டுமின்றி ஐஐடியில் ஆராய்ச்சி வலுவாக இருப்பதால் சுயதொழில் செய்யவும் மாணவர்கள் செல்கின்றனர்’, என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க...ஃபாத்திமாவின் செல்போன் பெற்றோர் கைக்கு சென்றது எப்படி? CBCID விசாரணை