சென்னை ஐஐடி இயக்குனர் காமக்கோடி சென்னை:வெளிநாட்டில் முதல் முறையாக அமைக்கப்பட்டுள்ள சென்னை ஐஐடி வளாகத்தை, சான்சிபார் அதிபர் டாக்டர் ஹுஸைன் அலி மின்யி இன்று (நவ.6) திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக சென்னை ஐஐடியின் இயக்குனர் காமகோடி செய்தியாளர்களிடம் பேசியதாவது, "சென்னை ஐஐடியின் சான்சிபார் வளாகத்தை, சான்சிபார் அதிபர் டாக்டர் ஹுஸைன் அலி மின்யி இன்று திறந்து வைத்தார்.
தான்சானியா நாட்டின் தன்னாட்சி பகுதியாக விளங்கும் சான்சிபாரில் சென்னை ஐஐடியின் புதிய வளாகம் இன்று (நவ.6) தொடங்கப்பட்டுள்ளது பெருமையாக இருக்கிறது. தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவில் நான்காண்டு இளங்கலை அறிவியியல் படிப்பும், தரவு அறிவியியல் மற்றும் செயற்கை நுண்ணறிவில் 2 ஆண்டு முதுகலை தொழில்நுட்ப படிப்பும் தொடங்கப்படுகிறது.
ஐஐடி-களில் சர்வதேச வளாகத்தை அமைக்கும் முதலாவது கல்வி நிறுவனமாக சென்னை சான்சிபார் திகழ்கிறது. இந்தியாவின் உயர்தரக் கல்விமுறையை சர்வதேச அரங்கிற்கு எடுத்துச் செல்லும் இந்திய அரசின் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. ஐஐடி-க்களில் சர்வதேச வளாகத்தை அமைக்கும் முதலாவது கல்வி நிறுவனமாக சென்னை ஐஐடியின் சான்சிபார் திகழ்கிறது.
சான்சிபார் நகருக்கு தெற்கே ஏறத்தாழ 15 கி.மீ. தொலைவில் பிவேலியோ (Bweleo) மாவட்டத்தில் அமையப் பெற்றுள்ள இந்த வளாகம், மாணவர்களின் தற்போதைய தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட சர்வதேச வசதிகளைக் கொண்டிருக்கிறது. மேலும், 232 ஏக்கர் பரப்பளவில் நிரந்தர வளாகம் ஒன்றரை ஆண்டில் அமைக்கப்பட உள்ளது. இக்கல்வி நிறுவனம் தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவில் பிஎஸ் (BS), எம்டெக்(M.Tech) ஆகிய படிப்புகளை வழங்குகிறது. வரும் ஆண்டில் மேலும் 5 பாடத்திட்டங்கள் இடம்பெற உள்ளன.
சான்சிபாரின் முதல் பேட்ச்சில் சான்சிபார், மெயின்லேண்ட் தான்சானியா, நேபாளம், இந்தியா ஆகியவற்றைச் சேர்ந்த மாணவர்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். சான்சிபாரில் உள்ள பாடத்திட்டங்களில், இந்தியர்கள் உள்பட அனைத்து நாட்டினரும் மாணவர்களாகச் சேரலாம். தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய விரிவான பாடத்திட்டம் தவிர்த்து, மாணவர்கள் கல்வி பயிலும் காலத்தில் தங்களுக்கு விருப்பமான வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஐக்கிய குடியரசு, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஐஐடி மெட்ராஸ் கூட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ள கல்வி நிறுவனங்களுடன் வெளிநாட்டுக் கல்வி, செமஸ்டர் பரிமாற்றத் திட்டம், பல்வேறு பொருத்தமான நிறுவனங்களுடன் உள்ளகப் பயிற்சிகள் (internships), சென்னை ஐஐடி வளாகத்தில் பாடத்தேவைகள் சிலவற்றைப் பூர்த்தி செய்யும் வாய்ப்பு ஆகியவை இதில் அடங்கும்.
முதல் கல்வியாண்டுக்கான (2023-24) வகுப்புகள் அக்டோபர் 2023-ல் தொடங்கப்பட்டுள்ள நிலையில், சான்சிபார், இந்தியா, நேபாளம், தான்சானியா, மெயின்லேண்ட் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுடன் இந்த வளாகம் தனது முதலாவது செமஸ்டரைத் தொடங்கியுள்ளது. தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவில் நான்காண்டு இளங்கலை அறிவியல் படிப்பிலும், தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவில் இரண்டாண்டு முதுகலை தொழில்நுட்ப படிப்பிலும் மொத்தம் 45 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சான்சிபார் வளாகத்திற்கு தேவையான அனைத்து வகையான நிதியையும் சான்சிபார் அரசு வழங்குகிறது. இந்த ஆண்டு ஆப்பிரிக்கா மற்றும் இந்திய மாணவர்கள் பாடவகுப்பில் இணைந்து உள்ளனர். ஆப்பிரிக்கா நாடுகளில் தொழில் வளர்ச்சியின் தேவை அதிகம் உள்ளது. சான்சிபார் போன்ற பகுதிகளில் தொழில் வளர்ச்சி குறித்த ஆர்வம் அதிகரித்து உள்ளது. வரும் ஆண்டுகளில் எலக்ட்ரானிக்ஸ் பாடப்பிரிவு, கடல் சார் அறிவியல் உள்ளிட்ட 5 பாடப்பிரிவுகள் புதியதாக துவக்கப்படும். மேலும் சென்னை ஐஐடியில் உள்ளது போல் ஆராய்ச்சி நிறுவனம் அமைக்கப்படும். இதனால் ஆராய்ச்சியில் அதிகளவில் ஈடுப்பட முடியும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:வேலூரில் ஹைடெக் வசதிகளுடன் கூடிய அரசுப் பள்ளி..! கல்வியை சுகமாய் அனுபவிக்கும் மாணவர்கள்!